Friday, November 22, 2013

கமல் அட்வைஸால் சீரியஸ் ஹீரோவாக மாறிய விவேக்!

கமல் அட்வைஸால் சீரியஸ் ஹீரோவாக மாறிய விவேக்!

கமல் அறிவுரையால், காமெடியனாக இருந்து சீரியஸ் ஹீரோவாக முதல் முறை நடித்துள்ளேன் என்கிறார் விவேக்.
டிரிபிள் எஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜே.ஏ.லாரன்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘நான்தான் பாலா'.
இந்த படத்தில் நாயகனாக காமெடி நடிகர் விவேக் ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கண்ணன் இயக்கியுள்ளார். வெங்கட் க்ரிஷி என்பவர் இசையமைக்கிறார். மணவாளன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படம் குறித்து நடிகர் விவேக் கூறியிருப்பதாவது:
‘நான்தான் பாலா' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது அவார்டுக்காக எடுக்கப்பட்ட படம் கிடையாது. கமர்ஷியல் படம். இந்த படத்தில் சண்டைக்காட்சிகளும் உள்ளன. அவை, வழக்கமான சண்டைக் காட்சிகள் போல் இல்லாமல் வித்தியாசமாக படமாக்கியிருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன்.

பாடல்களை நா.முத்துக்குமார், இளையகம்பன் ஆகியோர் எழுதியுள்ளனர். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கவிஞர் வாலியிடம் கேட்டு ஒரு பாட்டை வாங்கியிருக்கிறோம். அவர் இதுவரை எழுதிக்கொடுத்த பாடல்களில் இதுதான் கடைசிப் பாடல் என்று சொல்லிக்கொள்ளும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

இந்த கதையை பலமாதங்களுக்கு முன்பு நான் கேட்டபோது இந்த கதையை நான் பண்ணலாமா? வேண்டாமா? என்ற அச்சம் என்னுள் எழுந்தது. காரணம் என்னவென்றால் இது ஒரு சீரியஸ் கதை. 25 வருடமாக மக்களிடம் காமெடியனாக போய் சேர்ந்திருக்கிறோம். திடீர்னு அதிலிருந்து மாறி ஒரு சீரியஸ் கேரக்டர் பண்ணும்போது ரசிகப் பெருமக்கள் ஒத்துக் கொள்வார்களா? என்ற தயக்கம் இருந்தது.

இப்படி என் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் உலகநாயகன் கமல் ஒரு நிகழ்ச்சியில் என்னை சந்தித்து 25 வருடம் காமெடி பண்ணிட்டீங்க. நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க இதுதான் சரியான நேரம். அது உங்களுடைய இன்னொரு பரிணாமத்தை வெளியே எடுத்து வரும் என்று சொன்னார். அதன்பிறகுதான் இந்த கதையை உறுதியாக செய்ய ஆரம்பித்தேன்.

ஆனால், படம் முடிந்து இப்போது பார்க்கும்போது, என்னுடைய திரை வாழ்க்கையில் இந்த படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று உணர்கிறேன். நகைச்சுவை நடிகர்களுக்கு கிடைக்கக்கூடிய கௌரவமாக இந்த படம் இருக்கும். இந்திய நகைச்சுவை நடிகர்களுக்கு கிரீடத்தில் ஏற்றிவைக்கப்பட்ட ஒரு மகுடம் என்றே இந்த படத்தைச் சொல்லலாம். எல்லா காமெடியன்களும் இந்த படத்தை பார்த்து பெருமைப்படுவார்கள். அப்படி ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறேன்

இதற்கு பெரிய அளவில் நன்றி சொல்ல வேண்டியது உலகநாயகன் கமலுக்குத்தான். இந்த படம் ரொம்ப வித்தியாசமாக வந்திருக்கிறது. இது தமிழ்நாட்டு ரசிகர்களின் இதயத்தையும் தட்டும், டெல்லி விருது கதவுகளையும் தட்டும். அதுபோன்ற வித்தியாசமான படமாக வந்திருக்கிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கூடிய விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த வெளியீட்டு விழாவில் ஒருவர் கொடுக்கவேண்டும், மற்றொருவர் வாங்கவேண்டும் என்பது சம்பிரதாயம். அதில் ஒருவர் உலகநாயகன் கமல். மற்றொருவர் யார் என்பதை இப்போதைக்கு சஸ்பென்ஸாக வைக்கிறேன்," என்று கூறி முடித்தார்.

More News Click Here.....

No comments: