Wednesday, November 6, 2013

மலைவாழ் சிறுமிகளை பலாத்காரம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும்: மலைவாழ் மக்கள் கோரிக்கை - www.tnfinds.com - Best site in the World

மலைவாழ் சிறுமிகளை பலாத்காரம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும்: மலைவாழ் மக்கள் கோரிக்கை

மலைவாழ் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் ஒன் இந்தியா-தமிழ் செய்தியாளரிடம் கூறுகையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா தொட்டப்பநாயக்கனூர் கிராமம் குறிஞ்சி நகரில் பளியர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 25 ம் தேதி அருகிலுள்ள மலை அடிவாரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாணிக்கம் மகள் (வயது11), வேல்ச்சாமி மகள் (வயது 14), சடையன் மகள் (வயது 13) ஆகிய மூவரையும் அருகிலுள்ள வாசிநகர் பகுதியைச் சேர்ந்த சின்னன் மகன் சிவராமன், மணி மகன் வாசி, முருகன் மகன் ராஜீ ஆகியோர் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். மேலும் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என சிறுமிகளை மிரட்டியும் உள்ளனர். இந்த நிலையில் 26 ம் தேதி காலையே உசிலம்பட்டி மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மாணிக்கம் மற்றும் வேல்சாமி ஆகியோருடைய குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகளில் ஒருவரான சிவராமன் இதுவரை கைது செய்யப்படவே இல்லை. மற்றொரு குற்றவாளியான வாசி ஜாமீனில் வெளிவந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. மதுரை மாவட்ட காவல்துறை குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்ச்சி சம்பந்தப்பட்ட வழக்கை எவ்வளவு அலட்சியமாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவான முறையிலும் கையாளுகின்றனர் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. முதல் தகவலறிக்கையில், பாலியல் துன்புறுத்தல் முயற்சி என்றே காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. காவல்துறையினரின் இத்தகைய அணுகுமுறைக்கும், மெத்தன போக்கிற்கும் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணை நேர்மையாகவும், முழுமையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், குற்றவாளிகளில் ஒருவரான சிவராமன் உடனடியாக கைது செய்யப்படுவதுடன், ஜாமீனில் வெளிவந்துள்ள வாசி என்பவரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையிலடைக்கப்பட வேண்டும். வழக்கு விரைவாகவும், முறையாகவும் நடைபெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசு முன்வர வேண்டுமென தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வற்புறுத்தி கோருகிறோம். மேற்கண்ட கோரிக்கைகளை வற்புறுத்தி, அரசு உடன் தலையிடக் கோரி நவம்பர் 10 ம் தேதி உசிலம்பட்டியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments: