Saturday, November 16, 2013

சண்டையில் முடிந்த சத்தியம் டிவி லைவ்... காங். பெண் எம்.எல்.ஏவை அசிங்கமாக திட்டியதால் பரபரப்பு! - www.tnfinds.com - Best site In the World

சண்டையில் முடிந்த சத்தியம் டிவி லைவ்... காங். பெண் எம்.எல்.ஏவை அசிங்கமாக திட்டியதால் பரபரப்பு!

சத்தியம் தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பப்பட்ட சத்தியம் அது சாத்தியம் என்ற டிவி நேரலை நிகழ்ச்சியின்போது தொலைபேசியில் பேசிய நபர் ஒருவர் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ விஜயதாரணி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகவும், தாறுமாறாகவும் திட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து டிவ நிறுவன உரிமையாளர்களின் வீடுகளுக்குப் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

சத்தியம் தொலைக்காட்சியில் நேற்று இரவு 'சத்தியம் - அது சாத்தியம்' நிகழ்ச்சி 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை நடந்தது. அதில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா? தவறா? என்ற விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி எம்.எல்.ஏ., பாஜக மாநில பொருளாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று விவாதம் செய்துகொண்டிருந்தனர்.

நிகழ்ச்சியின் இடையே பொதுமக்களிடம் இருந்து தொலைபேசி வழியாக கருத்துக்கள் பெறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தமிழ்தாசன் என்பவர், தன்னை மதிமுக பிரமுகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், முள்ளிவாய்க்கால் முற்றம் வைப்பது தமிழர்களின் கடமை. இதைப்பற்றி பேச காங்கிரசுக்கும், முதல்வருக்கும் என்ன தகுதி உள்ளது? என்று கேட்டுள்ளார். இதற்கு விஜயதாரணி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் கோபமாக, விஜயதாரணியையும், முதல்வரையும் தவறான வார்த்தைகளால் கடுமையாக பேச ஆரம்பித்து விட்டார்.

இதையடுத்து விஜயதாரணி, ஆவேசமடைந்து தமிழ்தாசனை உடனே கைது செய்ய வேண்டும் என்று சத்தமாக பேசினார். டிவி நிறுவனத்திற்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயதாரணியை, நிகழ்ச்சித் தொகுப்பாளர் அரவிந்தன், ஆசிரியர் விஜயரங்கன் ஆகியோர் சமாதானப்படுத்திப் பார்க்க முயன்றனர். ஆனால் விஜயதாரணி அமைதி அடையவில்லை.

இந்த நிலையில் சத்தியம் டிவி உரிமையாளர்கள் ஐசக் பால் லிவிங்ஸ்டன் மற்றும் மோகன் சி லாசரஸ் ஆகியோரது வீடுகளுக்குப் போலீஸார் விரைந்தனர். துணை கமிஷனர் சேவியர் தனராஜ், ஐசக் பால் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
டிவியில் போனில் வந்து பேசிய நபரால் ஏற்பட்ட இந்த குழப்பத்தால் நேற்று இரவு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டு விட்டது.

More News Click Here.............. 



No comments: