Tuesday, December 24, 2013

பிப்.12ல் 7 வது ஐ.பி.எல்.ஏலம்: விதிமுறை வெளியிட்டது பிசிசிஐ - www.tnfinds.com -Best site in the world....


பிப்.12ல் 7 வது ஐ.பி.எல்.ஏலம்: விதிமுறை வெளியிட்டது பிசிசிஐ

மும்பை: 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீரர்களின் ஏலத்தை பிப்ரவரி 12, 13ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 

7-வது ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகளில் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு சுறுசுறுப்பாக இறங்கியுள்ளது. அடுத்த ஆண்டுக்கு அணிகளின் சம்பள உச்சவரம்பு 60 கோடியாக ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் தங்களின் பழைய வீரர்களில் ஐந்து பேரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற புதிய விதிமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஐபிஎல் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஏலம் நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்படும். 

அணிகளின் செலவு உச்சவரம்பு 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளுக்கு 5 சதவீதம் உயர்த்தப்படும். வீரர்கள் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். அதேசமயம் மேலும் ஒரு ஆண்டோ அல்லது இரண்டு ஆண்டுகளோ ஒப்பந்தத்தை நீட்டித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15-ம் தேதிக்கு முன்னதாக இந்த ஒப்பந்த நீட்டிப்பு செய்யப்படவேண்டும்.

 முதல் 5 வீரர்கள் தவிர மற்ற வீரர்களை ஏலத்தின் மூலம் அணியினர் தீர்மானித்துக் கொள்ளலாம். இந்த ஐந்து வீரர்களின் சம்பளம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிலையாகத் தீர்மானிக்கப்படும். இதன்படி இந்த ஐவரில் முதல் நிலையில் இருக்கும் வீரர் மூன்று ஆண்டுகளுக்கு 12.5 கோடி சம்பளம் பெறுவார். இரண்டாவதாக வருபவர் 10.5 கோடியும், மூன்றாவது வீரர் 7 கோடியும், நான்காவது வீரர் 5 கோடியும், ஐந்தாவது வீரர் 4 கோடியும் பெறுவார்கள். 

அணிகளின் சம்பள உச்சவரம்பு 60 கோடியாக நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த ஐந்து பேருக்கும் 39 கோடி கொடுத்தது போக மீதமிருக்கும் 21 கோடியில்தான் அவர்கள் மற்ற வீரர்களுக்கு ஏலத்தொகையை நிர்ணயிக்க வேண்டும். இதனால் ஒரு அணியினால் ஐந்து முதல் நிலை வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. 

தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு மேற்கண்ட விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 16 வீரர்களுக்கு குறையாமலும், 27 வீரர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு வீரர்கள் 9 பேர் வரை இருக்கலாம் என்றும் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Hot News Click Here..








No comments: