Saturday, December 21, 2013

சிங்கப்பூரில் இருந்து விசாரணையின்றி வெளியேற்றப்பட்டோம்: தமிழக இளைஞர்கள் கண்ணீர் - www.tnfinds.com - Best site in the world...


சிங்கப்பூரில் இருந்து விசாரணையின்றி வெளியேற்றப்பட்டோம்: தமிழக இளைஞர்கள் கண்ணீர்

சென்னை: கலவரத்தில் ஈடுபடாத தங்களை விசாரணை எதுவும் இன்றி சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றிவிட்டதாக தமிழகம் திரும்பிய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 சிங்கப்பூர் கடந்த 8ந் தேதி லிட்டில் இந்தியா பகுதியில் பேருந்து விபத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் தமிழக இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.


இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் செல்போனில் இருந்து சிங்கப்பூரில் இருக்கும் தங்கள் நண்பர்களிடம் பேசியுள்ளளனர். அதனை சிங்கப்பூர் போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர்களிடம் பேசியவர்களை முதலில் நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு செய்து வருகிறது. இந்த நடவடிக்கையில் முதல் கட்டமாக 53 இளைஞர்கள் 20.12.2013 வெள்ளிக்கிழமை இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.

 அதில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மற்றும் கருக்காகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தினேஸ் ஆகிய இருவரும் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து பேசிய முருகானந்தம், நான் 6 ஆண்டுகளாக சிங்கப்பூர் சென்று வருகிறேன். கடைசியாக 8 மாதங்களுக்கு முன்பு சென்றேன்.

 நான் வேலை பார்க்கும் இடம் தனியாகவும் தங்கி இருக்கும் இடம் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ளது. வழக்காக வேலை செய்யும் இடத்திலேயே தங்கும் நான் அன்றுதான் தங்கி இருக்கும் இடமான லிட்டில் இந்தியாவிற்கு வந்தேன். நான் கலவரத்தில் ஈடுபடவில்லை. கலவரம் நடந்ததே எல்லாம் முடிந்த பிறகு தான் தெரியும். 10ந் தேதி நான் வேலை செய்யும் இடத்திற்கு வந்த போலிசார் விசாரணைக்கு என்று அழைத்து வந்தனர். கலவரத்தில் ஈடுபடவில்லை என்று சொல்லியும் கேட்கவில்லை.

 சிவப்பு கால்சட்டையும், வெள்ளை பனியனும் கொடுத்து கையில் ஊதா நாடாவை கட்டி 3 நாட்கள் சிறையில் வைத்திருந்தார்கள். தமிழ் அதிகாரிகள் விசாரணை செய்தார்கள். ஆனால் விசாரணையில் நாங்கள் சொல்லியதை பதிவு செய்யாமல் குடிபோதையில் இருந்ததால் கலவரம் நடந்து ஏதும் தெரியவில்லை என்று பதிவு செய்தார்கள். செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள சொன்னார்கள்.

 கலவரம் செய்யவில்லை என்றேன். அதன் பிறகு இந்திய ஹை கமிஷன் அதிகாரி வந்து பெயர் முகவரி மட்டும் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். வேறு எந்த விசாரணையும் செய்யவில்லை. அதன் பிறகு நாங்கள் வேலை செய்த நிறுவனத்திடம் வரவேண்டிய சம்பள பாக்கிகளை வாங்கிக் கொடுத்து இந்திய விமானத்தில் ஏற்றிவிட்டார்கள்.

 ஏன் ஊருக்கு அனுப்புகிறீர்கள் என்று கேட்டும் கடைசி வரை பதில் சொல்லவில்லை. மறுபடி சிங்கப்பூர் வர முடியுமா என்று கேட்டேன். எம்.ஓ.எம். க்கு கடிதம் எழுதி அனுமதி கிடைத்தால் வரலாம் என்று அனுப்பிவிட்டார்கள். என்னைப் போலவே தவறு செய்யாத பலரும் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்றார்.

 கருக்காகுறிச்சி தினேஷ்.. கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்பட்டு விசாரணைக்கு அழைத்து சென்று ஊருக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். காரணம் சொல்லவில்லை என்றார்.

More Hot News Click Here...





No comments: