Monday, December 30, 2013

'ஜஸ்ட்' அரை மணி நேரத்தில் முடிந்து போன புதுச்சேரி சட்டசபைக் கூட்டம்! - www.tnfinds.com - Best Site In The World


'ஜஸ்ட்' அரை மணி நேரத்தில் முடிந்து போன புதுச்சேரி சட்டசபைக் கூட்டம்!

புதுச்சேரி:



 புதுச்சேரி சட்டசபை இன்று கூடிய அரை மணி நேரத்திலேயே முடிவடைந்து போனதால் கடுப்பாகிப் போன காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். அந்த அரை மணி நேரக் கூட்டத்திலும், அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பெல்லாம் செய்து அசத்தி விட்டனர்.

 இந்த ஆண்டின் கடைசிக் கூட்டமாக இன்று புதுச்சேரி சட்டசபைக் கூட்டப்பட்டது. பிற்பகல் 12.30 மணியளவில் கூட்டத்தைக் கூட்டினர். முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 சில திட்டங்கள் வாசிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் சபாபதி அறிவித்தார். அப்போது மணி ஒன்று. இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர்.

 புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. அரசு பணியில் இருந்து விலக்கப்பட்ட 4 ஆயிரம் ஊழியர்களுக்கு திரும்ப வேலை வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் புதுச்சேரி சட்டசபையில் விவாதிப்பதற்கு பல பிரச்னைகள் உள்ளது. ஆனால், அது எதையும் செய்யாமல் வெறும் அரை மணி நேரத்தில் சட்டசபையை முடித்து விடுவது எந்தவிதத்தில் நியாயம். எனவே, நாளைக்கும் சட்டசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கூட்டமாக எழுந்து கோஷமிட்டனர். ஆனால் சபாபதி கேட்கவில்லை. 

இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரும் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

 அதேசமயம், அதிமுகவில் அரை மணி நேரக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர். அதிமுக எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர், தனது தொகுதிக்கு சரியான முறையில் மேம்பாட்டு நிதி ஒதுக்கவில்லை என்றுக்கூறி சட்டசபை முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். 

பின்பு சபாநாயகர் சபாபதி, கூடிய விரைவில் நிதி ஒதுக்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து ஓம்சக்தி சேகர் தனது முற்றுகை போராட்டத்தை கைவிட்டுக் கிளம்பினார். ஆனால் காங்கிரஸார் போகவில்லை.

 முன்னதாக சபை தொடங்கியதும் அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசுகையில், இலவச வேட்டி-சேலை வழங்கப்படவில்லை, வெள்ளை அரிசி வழங்கப்படவில்லை, அறிவித்த திட்டங்கள் பல நிறைவேற்றப் படவில்லை. இதுபோல் பல பிரச்சினைகள் உள்ளது. இவற்றை சபையில் விவாதிக்க வேண்டும் என்றார்.

 அதற்கு சபாநாயகர், சபை மரபுகளை மதிக்க வேண்டும். மூத்த உறுப்பினரான உங்களுக்கு சபை மரபுகள் நன்றாக தெரியும். தற்போது இரங்கல் தீர்மானத்தை எடுத்து கொள்வோம் என்றார். 

இதையடுத்து அன்பழகன் எம்.எல்.ஏ. பேசுவதை கைவிட்டு இருக்கையில் அமர்ந்தார். பின்னர் இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்பட்டது. அப்போது மீண்டும் அன்பழகன் பேச எழுந்தார். ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அன்பழகன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர்.



No comments: