Monday, December 16, 2013

டிசம்பர் 16.. இந்தியாவின் கண்ணியம் ஓடும் பஸ்ஸில் பலாத்காரம் செய்யப்பட்ட கருப்பு நாள்!! - www.tnfinds.com - Best site in the world....


டிசம்பர் 16.. இந்தியாவின் கண்ணியம் ஓடும் பஸ்ஸில் பலாத்காரம் செய்யப்பட்ட கருப்பு நாள்!!

சென்னை: நாட்டையே உலுக்கிய டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு ஆண்டு முடிகிறது. 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரவில் டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பிசியோதெரப்பி மாணவியை, அவரது நண்பரின் கண் முன்னாலேயே மனித மிருகங்கள் கொடூரமாக சிதைத்து சின்னாபின்னமாக்கி சாலையில் போட்டுச் சென்ற அக்கிரமச் செயல் நடந்தது தினம்தான் இன்று.

 இந்தியாவின் கண்ணியத்தையும், கெளரவத்தையும், கம்பீரத்தையும் உலக நாடுகள முன்பு மண்டியிட்டு வெட்கப்பட்டுத் தலை குனிய வைத்து அசிங்கத்தை ஆறு கொடூரர்கள் நிகழ்த்திய நாள் இது. 

பரிதாபத்துக்குரிய அப்பெண் சில நாள் உயிர்ப் போராட்டத்திற்குப் பின்னர் மரணித்த நிமிடங்கள்.. இந்திய ஆண்கள் வெட்கப்பட வேண்டிய நிமிடங்கள். அந்த கருப்பு தினத்தின் கடைசி சில மணி நேரங்களில் நடந்த சம்பவங்களின் துக்க தொகுப்பு....

சந்தோஷத்துடன் கடைசிப் பயணம்.


தனது நண்பருடன் டெல்லியின் செலக்ட் சிட்டிவாக் மால் திரையரங்களி்ல் தி லைப் ஆப் பை படம் பார்த்த அந்த மாணவி, தென் மேற்கு டெல்லியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்புவதற்காக அவசரம் அவசரமாக பஸ்ஸைப் பிடிக்க விரைந்தார்.

இரவு எட்டரை மணி....


முனிர்கா என்ற இடத்திற்குப் போய் விட்டால் வீட்டுக்குச் செல்லும் பஸ்ஸைப் பிடிக்கலாம் என்பதால் ஆட்டோ ஒன்றில் ஏறி அந்த இடத்தை எட்டரை மணியளவில் அடைந்தனர் அந்த மாணவியும், நண்பரும்.

அதோ பஸ்...


அப்போது அங்கு ஒரு பஸ் வந்தது. அப்பாடா பஸ் வந்ததே என்ற சந்தோஷத்தில் மாணவியும், நண்பரும் வேகமாக அதில் ஏறினர்.. விதியின் விளையாட்டும் கூடவே அவர்களுடன் பயணத்தைத் தொடங்கியது.

பஸ்ஸுக்குள் 6 பேர்.


பஸ்ஸில் ஏறிய பிறகுதான் பஸ்சில் மொத்தமே 6 பேர் இருப்பதைப் பார்த்தனர் மாணவியும், நண்பரும். ஆனால் அவர்களுக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை.

முனிர்காவிலிருந்து மஹிபால்பூர் வரை...


ஆனால் பஸ்சுக்குள் ஏறிய சில நிமிடங்களிலேயே நடந்த கொடூரம், நம் பரம விரோதிக்கும் கூட ஏற்படக் கூடாதது.. முனிர்காவில் ஆரம்பித்த அந்தக் கொடூரம், மஹிபால்பூர் வரை தொடர்ந்தது. அத்தோடு நில்லாமல், மீண்டும் முனிர்காவுக்கே பஸ்சைத் திருப்பினர் அக்கிரமக்காரர்கள். மறுபடியும் தொடர்ந்து அக்கிரமம்...

2 மணி நேர போராட்டம்.


கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு இந்த அக்கிரமத்தை சந்தித்தார் அந்தப் பெண். பின்னர் மஹிபால்பூர் பாலத்திற்குக் கீழே இரவு பத்து மணியளவில் இருவரையும் தள்ளி விட்டுப் போய் விட்டது அந்த நாசகாரக் கும்பல்.


உதவிக்கு வராத பொதுமக்கள்.


இருவரும் நிலைகுலைந்த நிலையில்.. அந்தப் பெண்ணோ ஆடைகளின்றி உயிருக்காக போராடிய நிலையில்.. வேடிக்கை பார்த்த நிறையப் பேர் கூடினர்.. ஆனால் உதவி செய்யத்தான் ஒரு ஜென்மமும் இல்லை..


போர்வை போர்த்தி உதவிக் கரம் நீட்டிய நல்லவர்கள்.


இந்த நிலையில்தான் அந்தப் பகுதி வழியாக கடந்து சென்ற வேன் ஒன்றில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணின் நிலையைப் பார்த்து அதிர்ந்து போய் வேனை நிறுத்தி போர்வையை எடுத்து அந்தப் பெண்ணின் உடலைச் சுற்றினர். பின்னர் அவரையும், அவரது நண்பரையும் வேனில் ஏற்றி, சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.


மிகக் கொடூரமான பலாத்காரம்.


அப்பெண்ணைப் பரிசோதித்த டாக்டர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். அந்த அளவுக்கு மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டிருந்தார் அப்பெண். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், இது மிக மோசமான மிருகத்தனமான செயல். எனது 20 வருட மருத்துவ வாழ்க்கையி்ல இப்படி ஒரு கொடூரமான செயலை நான் பார்த்ததே இல்லை. மிக மிக மோசமான பாலியல் தாக்குதல் இது. அந்தப் பெண் உள்ளுறுப்புகள் மிக மோசமான முறையில் சிதைந்து போயுள்ளன என்று வேதனையுடன் குறிப்பிட்டார். அப்பெண்ணின் வயிறு, குடல் உள்ளிட்டவை சிதைந்து சின்னாபின்னமாகிப் போயிருந்தன.

13 நாள் உயிர்ப் போராட்டம்.


கிட்டத்தட்ட 13 நாள் உயிருடனும், நம்பிக்கையுடனும் போராடிய அந்த அப்பாவிப் பெண்.. இறுதியில் உயிரிழந்து போனார்...டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் அவரது உயிர்ப் போராட்டம் முடிவுக்கு வந்தது.


விழிப்பை ஏற்படுத்தி விட்டு விழி மூடிய தேவதை.


தனக்கு நேர்ந்த கொடூரத்தின் மூலம் நாட்டு மக்களை தட்டியெழுப்பி விட்டு கண்ணை மூடிக் கொண்டார் அந்த தேவதை. ஆனாலும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது பெண்களை சீரழிக்கும் காலிக் கும்பல்களின் அட்டகாசங்கள்.. எத்தனை சட்டம் போட்டாலும், என்னதான் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் இதுபோன்ற அசிங்க மனிதர்களை அழிக்க முடியாது.. அவர்களின் மனங்களிலிருந்து பாலியல் வக்கிர மலங்கள் அதுவாகவே அகலும் வரை... அத்தனை பேரும் அவர்களாகவே உத்தமர்களாக மாறும் வரை...

More Hot News Click Here...
















































No comments: