Thursday, December 26, 2013

கிரெடிட் கார்டு கடன்களில் இருந்து தப்பிக்க அருமையான வழிகள்!!! - www.tnfinds.com - Best site in the world..


கிரெடிட் கார்டு கடன்களில் இருந்து தப்பிக்க அருமையான வழிகள்!!! 

சென்னை: இன்றைய நவீன உலகத்தில் மக்களிடம் பண புழக்கத்தை விட கார்டுகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது. இப்பொழுது வேலைக்கு செல்லும் அனைவரிடத்திலும் கிரெடிட் கார்டு உள்ளது, குறிப்பாக ஐடி துறை மற்றும் பண்நாட்டு நிறுவன பணியாளர்கள். 

பெரும்பாலும் எல்லோரும் சில வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கொடுக்கப்பட்ட கிரெடிட் கார்டை வைத்திருப்பார்கள். ஷாப்பிங் செய்யவும், விடுமுறையை கொண்டாடவும் அல்லது பில்களை செலுத்துவதற்கும் பணத்தைக் கொண்டு சென்ற காலம் முடிந்துவிட்டது. 

கிரெடிட் கார்டை விற்பனை நிலையங்களில் அல்லது பில் செலுத்தும் இடத்தில் தேய்த்து உடனடியாக பணத்தை செலுத்திவிடலாம். இதனால் பணம் திருட்டுபோகும் அபாயம் முழுமையாக குறைந்துள்ளது.

 கிரெடிட் கார்டு நிறுவனங்கள் முதலில் வாழ்நாள் இலவச கிரெடிட் கார்டையும், அதன் பின் ஒவ்வொரு உபயோகத்திற்கும் கவர்ச்சிகரமான வெகுமதி புள்ளிகளையும் அளித்து மக்களை வசப்படுத்தி வருகின்றன. 

குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட ஆரம்பத்தில் இதனால் ஈர்க்கப்பட்டு பின்பு பல வங்கிகளில் அளிக்கப்படும் அதிக கடன் தொகை கொண்ட கோல்ட் கார்டுகள், சில்வர் கார்டுகள் போன்ற பல கார்டுகளை வாங்கிக் கொள்கின்றனர்.

 இந்நிறுவனங்கள் உங்களை முழுத் தொகையை செலுத்துவதற்கு பதில் குறைந்தபட்ச தொகையை செலுத்தினால் போதும் என்று தவறாக வழிகாட்டுகின்றன.

 இந்த அம்சங்களை கொண்ட கார்டுகள் முதலில் வசதியாக தோன்றினாலும், நாளடைவில் உங்களை பெரிய கடன் சிக்கலில் தள்ளி திண்டாட வைத்துவிடும்.

 இந்த சிக்கலில் இருந்து நீங்கள் மிக விரைவில் தப்பி வெளியேறுவது மிக அவசியமானதாகும். இதற்கு நீங்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டியவை:

சுய ஆய்வு.


முதலில் உங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள் என்பதை ஆராயுங்கள். ஒவ்வொரு கார்டுகளின் பில்லையும் எடுத்துக் கொண்டு, எந்தெந்த பொருளுக்கு அதிக செலவு செய்துள்ளீர்கள் அல்லது செலவை தவிர்த்திருக்கலாம் என்பதை கண்டறியுங்கள். அத்தியாவசிய தேவைக்கான பொருட்களின் செலவு எது தவிர்க்கக்கூடிய பொருட்களின் செலவு எது என்பதை பிரித்தெடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தேவையற்ற செலவுகளை தடுக்கலாம்.

மாத செலவுகள்.


உங்களின் மொத்த வருமானம் மற்றும் மாத வீட்டுச்செலவு, பில் கட்டணம் எவ்வளவு என்பதை கணக்கிடுங்கள். அதில் எந்த செலவினை குறைத்து பணத்தை சேமிக்கலாம் என்று அறிந்து சிக்கன முறையை உறுதியாக பின்பற்றுங்கள்.

குறைந்தபட்ச தொகை செலுத்துதல்.


கிரெடிட் கார்டு பில்லில் உள்ள குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது உங்களை முடிவில்லாத கடன் சிக்கலில் அதிக வட்டியுடன் கொண்டு சேர்க்கும். இந்த சிக்கலில் இருந்து வெளியே வர குறைந்தபட்ச தொகையை மட்டுமே செலுத்துவதை தவிருங்கள்.

கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை.


அதிக கிரெடிட் கார்டுகள் உங்களுக்கு தேவை இல்லை. உங்களின் முறையான செலவுகளை சமாளிக்க ஒன்று அல்லது இரண்டு கிரெடிட் கார்டுகளே போதுமானது.

தேவையற்ற கிரேடிட் கார்டுகள்.


கடன் சிக்கலினை தவிர்க்க தேவையில்லாமல் அதிகமாக உள்ள கிரெடிட் கார்டுகளின் பாக்கியை செலுத்திய பின் அதை ரத்து செய்து விடுங்கள். கிரெடிட் கார்டு பில்லில் உள்ள பாக்கியை பில்லில் கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையின் படி செலுத்துங்கள். பணம் செலுத்த வேண்டிய தவணை நாட்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.

பாலன்ஸ் டிரான்ஸ்பர் வசதி.


சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பாலன்ஸ் டிரான்ஸ்பர் வசதி மூலம் வேறு நிறுவனத்தின் கிரெடிட் கார்டு பாக்கியை கவர்ச்சிகரமான சலுகையுடன் செலுத்த உதவுகின்றன. அவற்றைப் பெற முயற்ச்சி செய்யுங்கள்.

தனிநபர் கடன் சிறந்தது.


பெரிய தொகையை தனி நபர் கடனாக பெற்றோ, நண்பர்கள் அல்லது உறவினர்களிடமோ குறுகிய காலத்திற்கு கடனாக பெற்று உங்கள் கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையை செலுத்தி விடுங்கள். தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் கிரெடிட் கார்டின் வட்டி விகிதத்தை விட குறைவே.

கடைசியாக.


எச்சரிக்கையுடனும் கட்டுப்பாடுடனும் கிரெடிட் கார்டை உபயோகித்தால், அது உங்களுக்கு பணம் செலுத்த உபயோகமாகவும் வசதியாகவும் இருக்கும். தூண்டுதலினால் அதிகமாக செலவு செய்யாமலும், வட்டியில்லாமல் பணம் செலுத்தும் காலத்திற்குள்ளும் கடன் தொகையை செலுத்திடுங்கள்.

More Hot News Click Here...



















































No comments: