Monday, December 23, 2013

2013-ல் சர்ச்சை.. பரபரக்க வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்புகள் - www.tnfinds.com - Best site in the world....


2013-ல் சர்ச்சை.. பரபரக்க வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்புகள்

டெல்லி: இந்திய அரசியலில் வரலாற்று சிறப்பு மிக்க பல முக்கிய தீர்ப்புகளை நடப்பாண்டில் வழங்கி இருக்கிறது உச்சநீதிமன்றம். குறிப்பாக ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையிலான தீர்ப்புகளை அளித்திருகிறது உச்சநீதிமன்றம்.

 நடப்பாண்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது கிரிமினல் எம்.பிக்கள் பதவி இழப்பு தொடர்பானதும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற நோட்டா தொடர்பான உத்தரவும்தான். 

இந்திய அரசியல் கட்சிகளை மிகவும் கவலை கொள்ள, அதிர வைத்திருக்கும் இந்த தீர்ப்புகளைக் கூட மாற்றுவதற்கும் அரசியல் கட்சிகள் பகீர பிரயத்தனம் செய்த போதும் எதுவும் எடுபடாமல் போனது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியே!

கிரிமினல் எம்.பிக்கள் பதவி இழப்பு.


கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் எம்.எல்.ஏ, எம்.பி. பதவிகளில் நீடிக்கக் கூடாது, சிறையில் இருந்து தேர்தலில் போட்டியிட முடியாது. அத்துடன் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ, எம்.பிக்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பதவியில் நீடிப்பதற்கு வகை செய்யும் சட்டப் பிரிவையும் நீக்கி கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் இருக்க மத்திய அரசு அவசர சட்டத்தையெல்லாம் கொண்டுவர முயற்சித்தது. ஆனால் கடும் எதிர்ப்புகளாலேயே மறு ஆய்வு செய்ய மட்டுமே மத்திய அரசால் முடிந்தது.

நோட்டா.


தேர்தல் புறக்கணிப்பு என்பது ஜனநாயகத்தில் நக்சலைட் மனோபாவத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரையுமே ஆதரிக்க விருப்பம் இல்லை என்ற வாக்காளரின் உரிமையை எப்படி தெரிவிப்பது? என்ற கேள்விக்கு விடை தரும் வகையில்தான் நோட்டா பட்டனையும் அதாவது எவருக்குமே வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற பட்டனையும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்த சொல்லி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 16 லட்சம் பேர் நோட்டா பட்டனை பயன்படுத்தி இருக்கின்றனர். உச்சநீதிமன்றத்தின் அதிரடியில் நடைமுறைக்கு வந்த நோட்டாவும் அரசியல் கட்சிகளை அதிரவே வைத்திருக்கிறது.

சிபிஐ- கூண்டுக் கிளியா.


நடப்பாண்டு உச்சநீதிமன்றம் மேற்கொண்ட நடவடிக்கைகளிலேயே மிகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியது சிபிஐயின் அதிகாரம் தொடர்பானதுதான். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்பதுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையையே மத்திய அமைச்சர் திருத்தம் செய்தார் என்பதும் பிரச்சனையாயிற்று. இதில் கொந்தளித்த உச்சநீதிமன்றம், சிபிஐ என்பது கூண்டில் அடைக்கப்பட்ட கிளியா? முதலாளிகளின் பேச்சைக் கேட்டுத்தான் செயல்படுமா? என்றெல்லாம் சகட்டுமேனிக்கு சாடியது. அத்துடன் சிபிஐ சுதந்திரமான அமைப்பாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கிவிட இப்போது தன்னாட்சிப் பாதையை நோக்கி சிபிஐ பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஓரினச் சேர்க்கை சட்டவிரோதம்.


உலக நாடுகள் பலவற்றிலும் ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் உண்டு. இதைப் போலவே டெல்லி உயர்நீதிமன்றமும் ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமானதாக்கி ஒரு தீர்ப்பளித்தது. ஆனால் அண்மையிலோ உச்சநீதிமன்றம், இது சட்டவிரோதம், இயற்கைக்கு மாறான உறவு என்று அதிரடி தீர்ப்பு அளித்தது. இதுவும் தற்போது பெரும் விவாதப் பொருளாக இருக்கிறது.

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்தல் பாவமும் அல்ல குற்றமும் அல்ல.


உச்சநீதிமன்றம் நடப்பாண்டு அளித்த தீர்ப்புகளில் மற்றொன்று, ஒரு ஆணும் பெண்ணு திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழும் ஒன்றும் பாவமோ குற்றமோ அல்ல என்று அளித்த தீர்ப்புதான். அதே நேரத்தில் இப்படியான உறவு முறைகளில் உரிமைகள் பாதுகாப்புக்கான வழிமுறைகள், சட்ட நடைமுறைகளை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்ற எச்சரிக்கை வழிகாட்டுதலையும் உச்சநீதிமன்றம் முன்வைத்திருக்கிறது.

More Hot News Click Here...




































No comments: