Monday, December 23, 2013

உஷார்... புறநகர் மின்சார ரயில்களில் பெண்களை குறிவைக்கும் பிக்பாக்கெட் - www.tnfinds.com - Best site in the world..

உஷார்... புறநகர் மின்சார ரயில்களில் பெண்களை குறிவைக்கும் பிக்பாக்கெட்



பண்டிகை காலம் வந்துவிட்டாலே ஜேப்படி ஆசாமிகளுக்கு குஷிதான்.
 சென்னை போன்ற ஜனநெருக்கடி மிகுந்த ஊர்களில் பிக்பாக்கெட் அடிப்பது ரொம்பவே சுலபம். அதுமாதிரியான ஒரு கும்பல் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளது என எச்சரிக்கை செய்கிறது ரயில்வே போலீஸ்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக திருமால்பூர் வரை மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 254 சர்வீஸ்களாக இயக்கப்படும் மின்சார ரயிலை லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்துகின்றனர். இதில், சென்னையின் நுழைவாயிலாக கருத்தப்படும் தாம்பரத்திலும், வியாபார ஸ்தலமாக மாறியிருக்கும் தி.நகர் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனிலும் எப்போதுமே பயணிகள் கூட்டத்துக்கு பஞ்சமிருக்காது.

இதுபோன்ற முக்கிய ரயில் நிலையங்களில் பிக்பாக்கெட் ஆசாமிகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த பிக்பாக்கெட் ஆசாமிகளில் பெரும்பாலானோர் பெண்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இவர்கள் பெண் பயணிகளை குறிவைத்து நகை, பணத்தை அபேஸ் செய்து வருகிறார்கள். இது குறித்து ரயில்வே போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி குறிப்பு:
பூங்கா நகர், கடற்கரை, தாம்பரம், மாம்பலம், நுங்கம்பாக்கம், எழும்பூர், கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. சென்னையில் இருந்து காஞ்சிபுரம், தாம்பரம் சுற்றுப்புற பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிய நிறைய பேர் புறநகர் மின்சார ரயிலில் சென்று வருகின்றனர்.

இது போன்ற ரயில்களில் காலை, மாலை பீக் அவர்சில் அதிகளவு கூட்டம் காணப்படுகிறது. மேலும், பண்டிகை காலங்களில் பர்சேஸ் செய்வதற்காக மாம்பலத்துக்கும், கடற்கரை ரயில் நிலையத்துக்கு நிறைய பயணிகள் வருகிறார்கள். இவர்களை குறிவைத்து ஒரு கும்பல் பிக்பாக்கெட் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறது. இவர்களின் முக்கிய குறியே பெண்கள்தான். ரயிலில் கூட்ட நெரிசலில் பெண்கள் இறங்க முயலும் போதும், ரயிலில் ஏற முற்படும் போது கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து அவர்களின் கைப்பையை பிளேடு போட்டு பணத்தை திருடுகின்றனர். 

செயின் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். இதற்காக, ஆந்திராவில் இருந்து 30க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னையில் முகாமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.அவர்களை பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளும் நடக்கிறது. தினமும் ரயிலில் சென்று வரும் பெண்களிடம், ஜேப்படி பெண்கள் பற்றிய தகவல்களை தர உள்ளோம். பெண் பயணிகளிடம் இமெயில் ஐடி பெற்று, அவர்களுக்கு ஜேப்படி ஆசாமிகளின் புகைப்படத்தை அனுப்பி வைக்க உள்ளோம். மேலும், பிக்பாக்கெட் ஆசாமிகளின் புகைப்படத்துடன் கூடிய சிறிய கையேடுகளும் தயாரித்து அவற்றை பயணிகளுக்கு தருவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

புகார் செய்வது எப்படி?

மின்சார ரயிலில் பயணம் செய்யும் போது, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டுமென ரயில்வே போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ரயிலில் இருந்து இறங்கும் போதும் ஏறும் போதும் அருகில் யார் நிற்கிறார்கள், கைப்பை சரியாக இருக்கிறதா, அணிந்திருக்கும் நகைகள் இருக்கிறதா என கவனிக்குமாறும் கூறியுள்ளனர். ஜேப்படி ஆசாமிகளை பார்த்தாலோ, சந்தேகத்துக்கு இடமான நபர்கள் ரயிலில் பயணம் செய்தாலோ ரயில்வே போலீசாருக்கு 9962500500 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

More Hot News Click Here..

No comments: