Saturday, December 21, 2013

24 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்த பெண் விடுதலை - www.tnfinds.com - Best site in the world...

24 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்த பெண் விடுதலை

வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில் கடந்த 24 ஆண்டுகாலம் அடைபட்டிருந்த விஜயா என்ற பெண் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் விஜயாவின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

 திருப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). இவரது மனைவி பக்கா (எ) விஜயா (60) நாடோடி கலைஞர்களான இவர்கள் தெருவில் நடனமாடி பிழைப்பு நடத்தி வந்தனர். இரவில் இடம் கிடைக்கும் இடத்தில் தங்கி வந்தனர். கடந்த 24 ஆண்டுக்கு முன்பு ஒரு நாள் இரவு இவர்கள் வீதியோரம் படுத்திருந்த போது போதையில் வந்த வாலிபர் ஒருவர் விஜயாவை ஆசைக்கு இணங்க மிரட்டியுள்ளார் மறுத்த விஜயா அவரோடு போராடினார்.

 சத்தம் கேட்டு விழித்த சுப்பிரமணி அந்த வாலிபரை அடித்து உதைத்தார். இதில் கீழே விழுந்த அந்த வாலிபர் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கோவை சூலூர் போலீசார் 20.4.1990-ல் வழக்கு பதிவு செய்து நடனக் கலைஞர்கள் சுப்பிரமணி மற்றும் அரவது மனைவி பக்கா (எ) விஜயா ஆகியோரை கைது செய்தனர். ரூ.500-க்காக கொலை செய்ததாக (ஆதாயக் கொலை வழக்கு) பதிவான இவ்வழக்கில் இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சுப்பிரமணி வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி பக்கா (எ) விஜயா வேலூர் பெண்கள் தனிச் சிறையிலும் தண்டனை அனுபவித்து வந்தனர்.

 இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைக் கைதியாக உள்ள நளினியை பார்க்க 2011ம் ஆண்டு சென்னை வக்கீல் புகழேந்தி வந்தபோது, அவரிடம் ஒரு பெண் வேலூர் சிறையில் 22 ஆண்டுகளாக இருப்பதாகவும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கிறார் என்றும் நளினி தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து, சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநராக இருந்து வரும் புகழேந்தி, அதன் சார்பில் 2011-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதன் விசாரணை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் 6-வது அமர்வில் நீதிபதிகள் ராஜேஸ்வரன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

 2001-ம் ஆண்டு முதல் தமிழக அரசு, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகளை நன்னடத்தை மற்றும் கருணை அடிப்படையில் விடுவித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வயது முதிர்வை எட்டியவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்கலாம் என்ற நடைமுறையை அரசு பின்பற்றி வரும் நிலையில், 54 வயதை எட்டியுள்ள மனநிலை பாதிக்கப்பட்டவராக காணப்படும் விஜயாவை விடுவிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் தரப்பில் வாதிடப்பட்டது. 


இதையடுத்து 20-ந் தேதிக்குள் அப்பெண்ணை அரசு விடுவிக்க நீதிமன்றம் கால அவகாசம் அளித்தது. இந்நிலையில், அரசு உத்தரவின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் நேற்று காலை விஜயாவை சிறையில் இருந்து விடுவித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக விஜயா மனநிலை பாதித்தவர் போல் உள்ளார்.


விஜயாவின் கணவர் சுப்பிரமணி வேலூர் ஆண்கள் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார். விஜயா தற்போது வேலூரை அடுத்த ஊசூரில் உள்ள காருண்யா இல்லத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நீண்ட காலம் சிறையில் இருந்தவராக இப்பெண் கருதப்படுகிறார்.





No comments: