இமயமலையின் 12 புகழ்பெற்ற பனிக்கால சுற்றுலாத்தலங்கள்!
இமயமலை சாதாரணமாகவே மிகவும் குளிராக இருக்கும் இதில் எங்கே பனிக்காலத்தில் அங்கு பயணம் செய்வது என்றுதான் நிறைய பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பனிமூடிய சிகரங்கள், உறைந்துகிடக்கும் ஏரிகள், பனிச்சறுக்கு உள்ளிட்ட பனிக்கால விளையாட்டுகள் என்று இமயமலை பனிக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் சொர்கமாகவே திகழ்ந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இமயமலையை சேர்ந்த 3 மாநிலங்களும் குளிர்காலத்தின் போது அதிக பனிப்பொழிவை பெறுகின்றன. இந்தக் காலங்களில் இம்மூன்று மாநிலங்களை சார்ந்த சிம்லா, குல்மார்க், லே, லடாக், நைனித்தால் உள்ளிட்ட நகரங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
சோப்தா
சோப்தா உத்தரகாண்ட்டின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2680 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகள் மற்றும் புக்யால்ஸ் என்றழைக்கப்படும் செழுமையான பச்சைப் புல்வெளிகளைக் கொண்டிருப்பதினால் இந்த இடம் ‘குட்டி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது.
ஆலி
உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி! கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ள ஆலி, அங்குள்ள ஓக் மரங்களை கொண்ட சரிவுகள் மற்றும் பசுமையான ஊசியிலைக்காடுகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
குல்மார்க்
மலர் மைதானம் என்ற பொருளில் 'குல்மார்க்' என்று அழைக்கப்படும் இந்த நகரம் ஆங்கிலேயர்களால் 1927-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குல்மார்க் பகுதி 'கோண்டோலா' கேபிள் கார் பயணத்துக்காக உலக அளவில் மிகவும் பிரபலம். இந்த கேபிள் கார் உலகின் 2-வது உயரமான கேபிள் கார் பயணமாக அறியப்படுகிறது. அதோடு பனிச்சறுக்கு விளையாட்டுக்காகவும் குல்மார்க் நகரம் புகழ்பெற்றது.
பஹல்கம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாநகராட்சியில் பஹல்கம் எனும் இந்த அழகிய கிராமம் அமைந்துள்ளது. ஹிந்துக்களின் புனித பயணமான அமர்நாத் யாத்திரை பஹல்கமை கடந்து தான் செல்ல வேண்டும். பஹல்கமிலிருந்து இந்த யாத்திரையை முடிக்க மூன்று நாட்கள் தேவைப்படும்.
குஃப்ரி
குஃப்ரி என்னும் சிறிய நகரம் சிம்லாவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 2743 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சிம்லாவுக்கு அடுத்தபடியாக ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற பனிச்சறுக்கு ஸ்தலமான குஃப்ரியில் பனிமலையேற்றம், குதிரையேற்றம், கேம்பிங்க், கோ- கார்ட்டிங்க் போன்ற சாகச விளையாட்டுகளில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.
ர்மஷாலா
ஹிமாச்சல பிரதேசத்தில் காங்க்ரா பள்ளத்தாக்கின் நுழைவு வழியாக கருதப்படும் தர்மஷாலா, மனம் மயக்கும் பல சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது. தௌலதர் மலைத்தொடர்கள் இதன் பின்னணியிலிருந்து இதன் கண்ணுக்கினிய அழகை மேலும் அதிகப்படுத்துகிறது.
மணாலி
ஹிமாச்சல பிரதேசத்தில் சிம்லாவை போலவே அதிக மக்களால் சுற்றிப் பார்க்கப்படும் மலைவாசஸ்தலங்களில் மணாலி முக்கியமானது. இங்கு பனிக்காலங்களில் மவுண்ட்டெயின் பைக்கிங், பாராகிளைடிங், பனிச்சறுக்கு, ஜோர்பிங் போன்ற சாகச விளையாட்டுகள் மிகவும் பிரபலம்.
சிம்லா
ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலை நகரமாக திகழும் சிம்லா, 'கோடை காலப் புகலிடம்', 'மலைகளின் ராணி' போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. சிம்லாவில் பனிச்சறுக்கு விளையாடுவதற்காகவே எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் பனிக்காலங்களில் இந்த எழில்கொஞ்சும் மலைப்பிரதேசத்தை தேடி வருகின்றனர்.
ஸ்ரீநகர்
பூலோக சொர்க்கம்' மற்றும் 'கிழக்கின் வெனிஸ்' என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அழகிய நகரமாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதோடு ஸ்ரீநகரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தால் ஏரி உறைந்துபோய் பனிச்சறுக்கு விளையாட ஏற்றதாக மாறிவிட்டிருக்கும்.
முசூரி
உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. சமயச் சிறப்பு வாய்ந்த இடங்களான யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களின் நுழைவாயில் என்றும் முசூரி அழைக்கப்படுகிறது. சிவாலிக் மலைகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கின் எழில்மிகு தோற்றத்தை முசூரியில் இருந்து காணலாம்.
பட்னிடாப்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள உத்தம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை வாசஸ்தலம் பட்னிடாப். இங்கு பனிக்காலத்தின் போது பாராகிளைடிங், பனிச்சறுக்கு, ஜோர்பிங் போன்ற சாகச விளையாட்டுகள் மிகவும் பிரபலம்.
நைனித்தால்
‘இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மலைவாசஸ்தலமாகும்.
No comments:
Post a Comment