ஓட்டுக்கு பணம்: மாறி மாறி பணம் கொடுத்த கட்சியினர்… குஷியான ஏற்காடு வாக்காளர்கள்
இடைத்தேர்தல் வந்தாலே லட்சக்கணக்கில் பணம் ( ஏன் கோடியில் கூட) புரளும் என அரசியல் கட்சியினர் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். அதேபோல தொகுதி வாக்காளர்கள் காட்டிலும் பணமழைதான்.
வாக்களிக்க பணம் கொடுத்தாலோ, வாங்கினாலே ஓராண்டு சிறை என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த கட்சி ரூ.500 கொடுத்தால், நீங்கள் ரூ.1000 கொடுங்கள். அவர்கள் ரூ.1000மாக கொடுத்தால் நீங்கள் ரூ.3000 கொடுங்க எப்படியாவது அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தே ஆகவேண்டும் என்று மேலிட உத்தரவை அடுத்து இதுவரை ஒவ்வொரு வாக்காளர்கள் கையிலும் ரூ.4500 வரை கொடுத்துள்ளனராம் கட்சியினர்.
இன்றோடு கடைசி
ஏற்காடு தொகுதியில் டிசம்பர் 4ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளராக சரோஜா, தி.மு.க வேட்பாளராக மாறன் உள்பட 11 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடைகிறது.
கடைசி கட்ட பிரச்சாரம்
அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து அமைச்சர்கள், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள், நகராட்சி தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தொகுதியில் முகாமிட்டு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா ஏற்காடு தொகுதியில் சூறாவளி பிரசாரம் செய்தார்.
ஸ்டாலின் விறுவிறு
தி.மு.க. வேட்பாளர் மாறனை ஆதரித்து கனிமொழி எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பிரசாரம் செய்தனர். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக பிரசாரம் செய்து வருகிறார். கடைசி நாளான இன்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
கொடி அணிவகுப்பு
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்காட்டில் ஞாயிறன்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கிராமங்களில் சோதனை
நேற்று அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் 2 கூடுதல் சூப்பிரண்டுகள், 9 துணை சூப்பிரண்டுகள், 35 சிறப்பு படைகளுடன் பதற்றம் நிறைந்த வாழப்பாடி, பேளூர், சிங்கிபுரம், கூட்டாத்துப்பட்டி, அனுப்பூர் உள்ளிட்ட 128 கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
வெளியேற உத்தரவு!
ஏற்காடு தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதைத்தொடர்ந்து ஏற்காடு தொகுதியில் தங்கி முகாமிட்டுள்ளவர்கள் மாலை 5 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை முதலே வெளி மாவட்டத்தை சேர்ந்த கட்சியினர் தொகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் ஹோட்டல்களில் இதுநாள் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற விற்பனையும், டாஸ்மாக்கில் ஆறாக ஓடிய மதுபான விற்பனையும் இன்றோடு முடிவுக்கு வர இருக்கிறது.
அதிரடி சோதனை
இன்று மாலை 5 மணிக்கு மேல் தொகுதியில் வெளியாட்கள் தங்கி இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பிரசாரம் முடிந்த பிறகு தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், சமூக நலக் கூடம், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் வெளியாட்கள் தங்கி இருக்கிறார்களா? என்று அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை
ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடப்பதையொட்டி அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு டிசம்பர் 4ம் தேதி (புதன்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மூடல்
இன்று பிரசாரம் முடிவது முதல் ஓட்டுப்பதிவு முடியும் (டிசம்பர் 4-ந் தேதி மாலை 5 மணி) வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவரும், தேர்தல் அதிகாரியுமான மகரபூஷணம் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள 264 டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றை சார்ந்து செயல்படும் பார்கள், தனியார் விடுதியில் அரசு அனுமதி பெற்று செயல்படும் பார்கள் என அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்று மாலை 5 மணியுடன் மூடப்படுகிறது.
திருமங்கலம் ஃபார்முலா
இடைத்தேர்தல் வந்தாலே எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என நினைத்து திருமங்கலம் ஃபார்முலாவை கட்சிக்காரர்கள் கையில் எடுப்பது வழக்கம். கடைசி நேரத்தில் ஏற்காடு இடைத் தேர்தலிலும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ரூ.4500 வரை கை மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர வேஷ்டி, சேலை, காமாட்சி விளக்கு, வெள்ளிப் பொருட்களும் திரைமறைவில் வழங்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. திருமங்கலத்தில் கொடுக்கப்பட்டதை விட ஏற்காடு தொகுதியில்தான் அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
வெற்றி வாய்ப்பு
ஆளுங்கட்சிக்கு வெற்றி உறுதி என்றாலும் வாக்கு சதவிகிதம் குறையும் என்றே கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கடைசி கட்டத்தில் இரண்டு கட்சியினரும் திருமங்கலம் ஃபார்முலாவை கையில் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment