Tuesday, October 22, 2013

வாஜ்பாய் பெயரில் நாட்டிலேயே நீளமான மெட்ரோ பஸ் சாலை திறப்பு..! - www.tnfinds.com - Best Site in the World

வாஜ்பாய் பெயரில் நாட்டிலேயே நீளமான மெட்ரோ பஸ் சாலை திறப்பு..!


போபால்: இந்தியாவிலேயே மிக நீளமான மெட்ரோ பஸ் சாலை என்ற பெயரை மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அமைக்கப்பட்டுள்ள சாலை பெறுகிறது. இந்த நீண்ட நெடிய சாலைக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மை பஸ் என்று இந்த பஸ் போக்குவரத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக சாலைக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின் கீழ் உள்ள மத்தியப் பிரதேசத்தில், இந்த சாலை திறக்கப்பட்டுள்ளது தேர்தலை மனதில் கொண்டுதான் என்றும் ஒரு சலசலப்பை காங்கிரஸ் கிளப்பியுள்ளது. ஆனால் அதை பாஜக மறுத்துள்ளது.

போபால் நகரில் 24 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த பஸ் பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக நீளமான பிரத்யேக பஸ் பாதை இதுதான்.

போபாலில் நடந்த நிகழ்ச்சியில் இந்த பாதையை முதல்வர் சிவராஜ் செளகான் திறந்து வைத்து, வாஜ்பாய் பெயரைச் சூட்டுவதாக அறிவித்தார்.
 
இந்த விழாவுக்கு போபாலைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான கமல்நாத்தும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் வரவில்லை.

போபாலில் உள்ள ஒரே ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏவான ஆரிப் அக்கீலும் நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்தார். போபாலைச் சேர்ந்தவரான மறைந்த குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் பெயரை இந்த சாலைக்கு வைக்காததைக் கண்டித்து அவர் புறக்கணித்தார்.

இந்த விழாவின்போது நகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 26 புதிய குளிர்சாதன தாழ்தளப் பேருந்துகளையும் அறிமுகப்படுத்தினார் செளகான்.
 
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மை பஸ் போக்குவரத்தில், 24 கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடந்து விடலாம். இதற்கான பயணக் கட்டணம் ரூ. 26 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

No comments: