Thursday, October 24, 2013

எங்களை நீக்கலைன்னா.. பல ரகசியங்களை சொல்லுவோம்: விஜயகாந்துக்கு அதிருப்தி எம்.எல்.ஏ. எச்சரிக்கை! - www.tnfinds.com - Best Site in the World

எங்களை நீக்கலைன்னா.. பல ரகசியங்களை சொல்லுவோம்: விஜயகாந்துக்கு அதிருப்தி எம்.எல்.ஏ. எச்சரிக்கை!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தைரியம் இருந்தால் எங்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அதிருப்தி எம்.எல்.ஏ.சுந்தரராஜன் சவால்விட்டுள்ளார்.

ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழுக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.சுந்தரராஜன் அளித்த பேட்டி:

விஜயகாந்த்தோட நடவடிக்கைகள் பிடிக் காம நாங்க வெளியே வந்து ஒரு வருஷம் ஆகப் போகுது. எங்க தொகுதி மக்களுக்காக நாங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று, பல நல்ல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கிய நன்றிக்காக, நாங்கள் அம்மாவை வெளிப்படையாக ஆதரிக்கிறோம்.

இது, விஜயகாந்த்தைப் பொறுத்தவரை கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல். கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய எங்களை ஏன் இன்னும் கட்சியை விட்டு நீக்காமல் வைத்திருக்கிறார் விஜயகாந்த்? இது கட்சிக்கு அவர் செய்யும் துரோகம் அல்லவா?

ரொம்ப நேர்மையானவர்போல மேடையில் பேசும் அவர், அரசியல் கட்சிகளின் சட்டப்படி, தலைமைக்கு கட்டுப்படாமல் வெளியேறி வந்து விட்ட எங்களை நீக்குவதுதானே முறை? ஏன் செய்யவில்லை? அவர் கேட்ட விளக்கக் கடிதத்தைக்கூட நாங்கள் மதிக்கவில்லை.

அப்படியிருக்கும்போது, எதிர்க் கட்சி அந்தஸ்து போய்விடும் என்பதால்தானே எங்களை நீக்காமல் இருக்கிறார். இது, சட்டத்தை அவமதிக்கும் செயல் இல்லையா? இதன் மூலம் அரசாங்கத்தை ஏமாற்றி தன் பி.ஏ-வுக்கும் டிரைவருக்கும் அரசு தரும் சம்பளத்தை வாங்கிக்கொண்டிருக்கிறார்.

அவர் ரோஷக்காரராக இருந்தால், சொந்தப் பணத்தில் இருந்து தன் வேலைக்காரர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியதுதானே? வள்ளல் போல வெளியில் பேசுவார். ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பது, கூடவே இருந்த எனக்குத் தெரியும்.

எங்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். அது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும்'

தூத்துக்குடி கூட்டத்தில் பேசிய பிரேமலதா, விஜயகாந்த் தனியரு மனிதனாக மதுரையில் இருந்து சென்னைக்குச் சென்று கஷ்டப்பட்டு சினிமாவில் நடித்துச் சாதித்தவர் என்று பேசியுள்ளார். இந்த பிரேமலதாவுக்கு விஜயகாந்த்தைப் பற்றி என்ன தெரியும்?

1990-க்குப் பிறகுதானே தெரியும். விஜயகாந்த்தின் வளர்ச்சிக்கு யாரெல்லாம் பக்கபலமாக இருந்தனர் என்பது தெரியுமா? நான், ராவுத்தர், சேனா ஃபிலிம்ஸ் முதலாளி போன்ற 25-க்கும் மேற்பட்ட நண்பர்களுடைய உதவியால்தான் விஜயகாந்த் வளர்ந்தார். அவருக்குப் பெண் பார்த்துவிட்டு நாகர்கோவிலில் சிறையில் பூத்த சின்ன மலர் ஷூட்டிங்கில் இருந்தவரிடம் தகவல் சொன்னவனே நான்தான்.

பழைய சம்பவங்கள் தெரியாமல், அவரை மகுடிக்கு ஆடும் பாம்புபோல மாற்றி, எங்களைப் போன்ற பால்ய நண்பர்களையும் விஜயகாந்த்தின் உறவினர்களையும் அண்டவிடாமல் செய்துவிட்டது பிரேமலதா குடும்பம்.

கட்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து உழைத்த பலர் மனம் நொந்துபோவதற்கு காரணமான மூன்று பேரை பற்றி விஜயகாந்த்துக்கு எதுவுமே தெரியாதா?

இது இப்படியே போனால், விஜயகாந்த்தின் கதி அதோ கதிதான். மக்கள் அளித்த அங்கீகாரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள விஜயகாந்த்துக்கு தெரியவில்லை.

பெரிய பெரிய தலைவர்கள் அமர்ந்த எதிர்க் கட்சித் தலைவர் பதவியின் மதிப்பு தெரியவில்லை.

எனக்கு இதுகூட வருத்தம் இல்லை. நான் மதிக்கிற சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான அப்பழுக்கற்ற மனிதருமான தமிழருவி மணியன் அவர்கள், தமிழகத்தில் மதுவுக்கு எதிராகவும் தமிழர் நலன் காக்கவும் நேர்மையாகப் போராடி வருகிற தேர்ந்த அரசியல்வாதியான வைகோவுடன், இந்தக் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபாடான விஜயகாந்த்தைக் கொண்டுபோய் சேர்க்க ஆசைப்படுகிறாரே... அதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

விஜயகாந்த் தைரியமானவராக இருந்தால், எங்களை கட்சியைவிட்டு உடனே நீக்க வேண்டும். இல்லை என்றால், அவரைப் பற்றிய பல ரகசியங்களை நான் சொல்ல வேண்டிய நிலை வந்துவிடும். பழகிய தோஷத்துக்காகத்தான் இவ்வளவு நாள் பொறுத்துப் பொறுத்துப்போனேன். இனி முடியாது. இவ்வாறு எம்.எல்.ஏ. சுந்தரராஜன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

No comments: