Saturday, October 26, 2013

திருநங்கைகளுக்கு எவ்வளவோ செய்ய வேண்டி உள்ளது: சுப்ரீம் கோர்ட் உருக்கம் - www.tnfinds.com - Best Site in the World

திருநங்கைகளுக்கு எவ்வளவோ செய்ய வேண்டி உள்ளது: சுப்ரீம் கோர்ட் உருக்கம்


திருநங்கைகள் சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. தேசிய சட்ட உதவி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, சமூகம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் இருந்து திருநங்கைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த குடும்பம் மற்றும் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் பொது இடங்களில் குறிப்பிட்ட அளவே அனுமதி உள்ளது. அவர்களால் தேர்தலில் போட்டியிடவும், திருமணம் செய்யவும், வாக்களிக்கவும், பாஸ்போர்ட் பெறவும், ஓட்டுநர் உரிமம் பெறவும், ரேஷன் கார்டு மற்றும் ஐடி கார்டு ஆகியவை பெறவும் முடியாமல் உள்ளது. அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்க, தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. ஆனால் வாக்காளர் பட்டியலில் ஆண், பெண் என்ற இரு பிரிவு தான் உள்ளது. அதனால் மூன்றாவது பாலியல் வகையைச் சேர்ந்த திருநங்கைகளால் வாக்களிக்கவோ, தேர்தலில் போட்டியிடவோ முடியவில்லை. எனவே திருநங்கைகள் என்ற பிரிவையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஐடி கார்டு, ரேஷன் கார்டு, பள்ளியில் சேர, மருத்துவ உதவி பெற உள்ளிட்டவைக்கான விண்ணப்பங்களில் திருநங்கைகளுக்கு என்று ஒரு பிரிவை சேர்க்க வேண்டும். திருநங்கைகளுக்கு திருமணம் செய்து கொள்ள, குழந்தையை தத்தெடுக்க உரிமை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது தேசிய சட்ட உதவி ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் கூறுகையில், நீதித் துறை மற்றும் அரசமைப்பு சட்டம் ஆகியவை திருநங்கைகளை அங்கீகரித்தால் மட்டுமே மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய முடியும். இதற்காக அரசு பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலியல் பண்பு உண்டு. பாலியலை அடிப்படையாகக் கொண்டு திருநங்கைகளை பிரித்து பார்க்கக் கூடாது. அவர்கள் சமூகம் மற்றும் கல்வியறிவில் பின்தங்கிய குடிமக்களாக உள்ளனர். அரசு ஒதுக்கீடுகளின் பயனை திருநங்கைகளும் பெற வேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரைத்திருந்தது. அதனால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு சலுகைகள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், திருநங்கைகள் சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள். பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் அவர்கள் சேர்க்கப்படுவதில்லை. அவர்களுக்கு செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்றனர்.

No comments: