40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக நடிகராக அவதாரமெடுத்துள்ள பாலு மகேந்திரா!
சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா. அதில் பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இருவரைப் பற்றியும், அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே ஒரு விஷயம் சொன்னார்.
'ஜிவி பிரகாஷ், நீ நடிப்புல கவனம் செலுத்த நினைத்து இசையை விட்டுவிட வேண்டாம்.... பாரதிராஜா, நீங்களும் டைரக்ஷனை விட்டுவிட வேண்டாம்,' என்றார்.
இப்போது பாலு மகேந்திராவே நடிகராக களம் இறங்கியுள்ளார்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கும் தலைமுறைகள் படத்தின் முக்கிய பாத்திரத்தில் அவர்தான் நாயகன். ஒரு சிறுவனுக்கும் அவன் தாத்தாவுக்குமான பாசத்தை சித்தரிக்கும் கதையில், அந்த தாத்தா பாத்திரத்தில் நடித்திருப்பவர் பாலு மகேந்திராதான்.
ஆனால் படத்தின் ட்ரைலர்களில் ஒரு காட்சியில்கூட பாலு மகேந்திராவின் முகத்தைக் காட்டவில்லை. அவர் தலை மற்றும் நடந்து போவதை பின்பக்கமிருந்து மட்டுமே காட்டியுள்ளார்.
பொதுவாக வெளியில் அல்லது புகைப்படங்களில் தன் அடையாளமான தொப்பியை அவர் கழட்டுவதே இல்லை. எந்த விழாக்களுக்குப் போனாலும் அப்படித்தான். ஆரம்ப நாட்களிலிருந்தே பாலு மகேந்திரா என்றால் அந்தத் தொப்பிதான் கண் முன் நிற்கும்.
இந்தப் படத்தில் அந்தத் தொப்பி இல்லை. தன் நிஜமான முடி, முகத்துடன் தோன்றுகிறார்.
உங்கள் அடையாளமான தொப்பி இல்லாமல் நடிக்கிறீர்களே என்று கேட்டபோது, 'என் அடையாளம் தொப்பி அல்ல... என் படங்களே என் அடையாளம்" என்றார்.
No comments:
Post a Comment