சிங்கப்பூரில் தமிழர் பஸ்ஸிலிருந்து தள்ளி விட்டுக் கொலை.. வெடித்தது கலவரம்
சிங்கப்பூரில் தமிழரான பஸ் பயணி ஒருவரை, பஸ்ஸின் பெண் ஓட்டுநர் கீழே தள்ளி விட்டதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து தமிழர்கள் அந்தப் பஸ்ஸை தீவைத்துக் கொளுத்தினர். இது தற்போது கலவரமாக மாறியுள்ளது. இதையடுத்து 25 க்கும் மேற்பட்ட தமிழர்களைப் போலீஸார் கைது செய்துள்ளதால் பதட்டமாக இருக்கிறது. சிங்கப்பூரில் இதுபோன்ற கலவரம் வெடித்ததில்லை என்பதால் அங்கு போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தமிழர்கள் அனைவரும் கொதிப்புடன் உள்ளனர்.
இருப்பினும் சீனர்களான போலீஸார் கைது செய்யக் கூடும் என்ற அச்சத்தாலும், சீன வம்சாவளியினர் தங்களைத் தாக்கக் கூடும் என்பதாலும் பெரும்பாலான தமிழர்கள் வேலைக்குப் போகாமல் வீடுகளில் முடங்கிக் கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை சிங்கப்பூர் அதிர்ச்சிகரமான கலவரத்துடன் கண் விழித்தது. அமைதியான நகரமாக கருதப்படும் சிங்கப்பூரில் ஒரு தமிழர் பஸ்சிலிருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டதால் வெடித்த போராட்டம் இது. சிங்கப்பூரில் ஏராளமான வெளிநாட்டவர் வேலை நிமித்தமாக தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர். இவர்கள் லிட்டில் இந்தியா எனப்படும் பகுதியில் வார இறுதி நாட்களில் கூடி சந்தித்துக் கொள்வர். லிட்டில் இந்தியா ஒரு பெரிய சந்தைப் பகுதியும் கூட தமிழர்கள்தான் இங்கு பெரும்பாலும் புழங்குவர். தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும், நண்பர்களைச் சந்திக்கவும் இது தான் அவர்களுக்கான சிறந்த போக்கிடமும் கூட. இதேபோல நேற்றும் அங்கு பெரும் திரளானோர் கூடியிருந்தனர். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த 33 வயது தொழிலாளர் ஒருவர் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் அந்தப் பயணியை பஸ்ஸின் பெண் ஓட்டுநர் பிடித்துக் கீழே தள்ளி விட்டார். இதில் அவர் தலையில் அடிபட்டு பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார். இதைப் பார்த்து அங்கு கூடியிருந்தோர் பெரும் ஆவேசமடைந்தனர். அனைவரும் ஒன்று கூடி அந்த பஸ்சைத் தாக்கினர். பஸ்ஸுக்குத் தீவைக்கப்பட்டது. இதில் பஸ் எரிந்து போனது. இதையடுத்து சிங்கப்பூர் போலீஸார் - இவர்களில் பலர் சீன வம்சவாளியினர் - தமிழர்களைத் தாக்கத் தொடங்கின். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த நிலையில் இரண்டு போலீஸ் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. மேலும் அந்த பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸும் தாக்கி தீவைக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். இதையடுத்து தமிழர்கள் சிதறி ஓடினர். 25க்கும மேற்பட்ட தமிழர்களைப் போலீஸார் கைது செய்து பிடித்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களை கோர்ட்டில் நிறுத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் மேலும் சவுக்கடியும் கிடைக்கும் என்பதால் தமிழர்கள் மத்தியில் பெரும் பதட்டமும், கொதிப்பும் நிலவுகிறது. தற்போது லிட்டில் இந்தியா பகுதியில் அமைதி நிலவுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறுகையில், கலவரம் ஏற்பட என்ன காரணமாக இருந்தாலும் இதுபோன்ற செயலை ஏற்க முடியாது என்றார். மேலும் அவர் கூறுகையில், சட்டப்படி கலவரத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுப்போம். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இந்தக் கலவரத்திற்குக் காரணம், இது நாள் வரை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள், சீன வம்சவாளியினரிடமிருந்து சந்தித்து வரும் அடக்குமுறையின் கோப வெளிப்பாடே என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அங்கு வேலை பார்த்து வரும் வெளிநாட்டுத் தொழிலாளர் ஒருவர் கூறுகையில், மனம் போன போக்கில் நடந்த வன்முறையாக இதைப் பார்க்க முடியவில்லை. இத்தனை நாட்களாக மனதுக்குள் போட்டுப் புழுங்கி வந்ததன் வெளிப்பாடாகவே தெரிகிறது என்றார். 1969ம் ஆண்டு சிங்கப்பூரில் இன ரீதியான மோதல்கள் வெடித்தன. அதன் பிறகு அங்கு அதுபோன்ற மோதல் வந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக வந்திருப்பதால் சிங்கப்பூரில் பதட்டம் காணப்படுகிறது. சிங்கப்பூர் தனது அன்றாட பணிகளுக்குக் கூட வெளிநாட்டவர்களைத்தான் நம்பியுள்ளது. குறிப்பாக தமிழர்கள் இல்லாமல் அங்கு ஓரணுவும் அசையாது என்ற நிலைதான். தமிழர்கள் தவிர வங்கதேசத்தவர்கள் உள்ளிட்ட தெற்காசியர்களும் கணிசமாக உள்ளனர். கட்டுமானத் தொழில் உள்ளிட்டவற்றில் தமிழர்கள்தான் கோலோச்சுகின்றனர். இவர்கள்தான் இங்கு உயர்ந்து நிற்கும் பல கட்டடங்கள் பிரமாண்டமாக எழுந்து நிற்க மூல காரணம் ஆவர். இந்தக் கலவரம் காரணமாக தமிழ் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூரிலேயே நீண்ட காலமாக வசிப்போரும் கூட வெளியில் வராமல் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். சீன வம்சாவளி போலீஸார் தங்களைக் கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்ற அச்சத்தாலும், தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தாலும் அவர்கள் வெளியில் வராமல் உள்ளனர். சிங்கப்பூரில் சீன வம்சவாளியின்தான் பெரும்பான்மையாக உள்ளனர். தமிழர்கள் அடுத்த இடத்தில் உள்ளனர். சீன வம்சாவளியினர் தமிழர்களை கிட்டத்தட்ட அடிமை போலவே பார்ப்பதாகவும், மதிப்பதில்லை என்றும் நீண்ட காலமாகவே குமுறல்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment