இந்தியாவின் 4வது தவணை: ஐ.நா. பெண்கள் அமைப்பிற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி அளிப்பு
ஐ.நாவின் பெண்கள் அமைப்பிற்கு இந்தியா ஒரு மில்லியன் டாலர்
நிதிஅளித்துள்ளது.
பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது முதலியன ஐ.நா.
பெண்கள் அமைப்பின் முக்கியப் பணியாகும். இதன் நிர்வாகக் குழு ஸ்தாபகர்களில்
இந்தியாவும் ஒன்று. இந்த அமைப்பின் 2013-14 ஆம் ஆண்டிற்கான முக்கிய
தன்னார்வ பட்ஜெட் தொடரில் இந்தியா தனது பங்களிப்பாக ஒரு மில்லியன் டாலர்
தொகையை வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை ஐ.நா பெண்கள் அமைப்பின் உள்துறை பொது செயலாளரும்,
நிர்வாக இயக்குனருமான பும்சிலே மிலம்போ-நிகுகுகாவிடம் ஐ.நா.விற்கான இந்திய
நாட்டின் நிரந்தரப் பிரதிநிதியான அசோக்.கே.முகர்ஜி நேற்று அளித்தார்.
அப்போது, அசோக் கே.முகர்ஜி கூறுகையில், ‘ஐ.நா பெண்கள் அமைப்பின் இலக்குகளான
பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற செயல்களில்
இந்தியா நிலையான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்துறை
மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெண்களின் அதிகாரத்தை
மேம்படுத்துவதில் ஐ.நாவின் பெண்கள் அமைப்பு கவனம் செலுத்த வேண்டும்' என
அவர் தெரிவித்தார்.
இந்த நிதியானது, இந்தியா ஏர்கனவே அளித்திருந்த வாக்குறுதியின் நான்காவது
தவணை ஆகும். இந்தியா ஐ.நாவின் பெண்கள் அமைப்பிற்கான நிதியாக ஐந்து
மில்லியன் டாலர்கள் அளிப்பதாக கூறியிருந்தது. அதன்படி, தற்போது
அளிக்கப்பட்ட இத்தொகையுடன் சேர்த்து இந்தியா இதுவரை நான்கு மில்லியன்
டாலர்களை இந்த அமைப்பிற்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment