கள்ளக்காதலிக்காக தன்னைக் கொல்ல வந்த கணவர்.. ஆத்திரத்தில் தீவைத்து எரித்த மனைவி
சென்னை: கள்ளக்காதலி மீது உள்ள மோகத்தால் தன்னைக் கொல்ல முயன்ற கணவரை கீழே தள்ளி தீவைத்துக் கொளுத்திக் கொலை செய்தார் சென்னையைச் சேர்ந்த பெண். அந்தப் பெண்ணை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான பரத். இவருக்கு பவானி என்ற மனைவியும், தேவி, சஞ்சீவ் என இரு அழகான குழந்தைகளும் உள்ளனர். தேவிக்கு 8 வயதாகிறது, சஞ்சீவுக்கு 5 வயதாகிறது. இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்தான் பரத் இன்னொரு பெண் மீது மயக்கம் கொண்டார். அந்த மயக்கத்தில் மனைவியை உதாசீனப்படுத்தினார். எப்போதும் கள்ளக்காதலி நினைவாகவே இருந்து வந்தார். அவருடன் ஊர் சுற்றினார். இந்தத் தொடர்பு பவானிக்குத் தெரிய வந்து அதிர்ந்தார். கணவருடன் சண்டை போட்டார். இருப்பினும் பரத், தனது கள்ளக்காதலை விடவில்லை. மேலும் தீவிரமானார். இந்த நிலையி்ல் 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. திடீரென பரத் அலறினார். இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீடு புகுந்தனர். அப்போது பரத் தீயில் கருகிய நிலையில் துடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் மீட்டனர். ஆனால் நேற்று காலை பரத் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில், நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது என் மனைவி மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறினார். இதையடுத்து பவானியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். முதலில் தான் செய்ததை மறுத்தார் பவானி. பின்னர் ஒப்புக் கொண்டார். அவர் போலீஸாரிடம் கூறுகையில், என் கணவர் பரத், பெரியமேட்டை சேர்ந்த பெண்ணுடன் வைத்திருந்த கள்ளத் தொடர்பை கைவிட மறுத்தார். இதனால் தினமும் எங்களுக்குள் சண்டை நடக்கும். நேற்றுமுன்தினம், கள்ளக்காதலி வீட்டுக்குப் போய் விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். நான் அவரை தட்டிக்கேட்டேன். இதையடுத்து என்னை அடிக்க தொடங்கினார். பின்னர், வீட்டில் இருந்த மண்எண்ணெயை என் மீது ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றார். அவர் குடிபோதையில் இருந்ததால், மண்எண்ணெய் கேனை தட்டிப் பறித்தேன். என்னை கொலை செய்யும் அளவுக்கு வந்து விட்டபின்னர், இனியும் அவரை சும்மா விடக்கூடாது என்று முடிவு செய்தேன். அவரை கீழே தள்ளி விட்டு அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி, தீ வைத்தேன். பின்னர் வீட்டில் இருந்து வெளியில் ஓடி வந்து விட்டேன். தீ அவர் உடல் முழுவதும் பரவியதால், அவர் அலறினார். இதன் பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அங்கு அவர் இறந்து விட்டார். கள்ளக்காதலிக்காக கட்டிய மனைவியையே கொலை செய்யும் அளவுக்கு வந்து விட்டார் என்ற கோபத்தில்தான், அவரை தீ வைத்து கொன்று விட்டேன் என்று அழுதபடி கூறியுள்ளார் பவானி.
No comments:
Post a Comment