மக்கள் விரும்பினால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தத் தயார்: தாய்லாந்து பிரதமர்
பாங்காக்: பெரும்பான்மையான மக்கள் விரும்பினால் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு உடனடியாக 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தத் தயாராக இருப்பதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரக்களாக தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு எதிராக கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வீதிக்கு வந்து போராடும் கிளர்ச்சியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. சுற்றுலாத்தளமான தாய்லாந்தில் இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறையும் அபாயம் நிலவுகிறது. எனவே, போராட்டத்தை ஒடுக்க அரசு அமைதியான முறையிலும் முயற்சிகள் மேற்கொண்டு பார்த்தது.
ஆனபோதும், ஷினவத்ராவை ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கியே தீருவது என்பதில் போராட்டக்காரர்கள் உறுதிபட உள்ளனர். இன்று (திங்கட்கிழமை), ஷினவத்ராவை பதவியில் இருந்து இறக்க இறுதிக்கட்ட போராட்டம் நடத்தப்போவதாக அரசுக்கு எதிரான போராட்டக்குழு தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான சுதெப் தாவுக்சபன் அறிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று தொலைக்காட்சி மூலம் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார் பிரதமர் ஷினவத்ரா. அப்போது அவர் கூறியதாவது :- ‘நான் பதவி விலகத்தயார். பாராளுமன்றத்துக்கு 60 நாளில் தேர்தல் நடத்தவும் தயார். இதுதான் மெஜாரிட்டியான மக்களின் விருப்பம் என்றால் இதை செய்வேன். நாம் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தலாம். நாம் என்ன செய்யவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், அதன்படி செயல்படுவோம்' என்றார். அதே நேரத்தில், போராட்டக்காரர்கள் தனது யோசனையை நிராகரித்தால், அரசியல் நெருக்கடி நீண்டகாலத்துக்கு தொடர்ந்து விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment