தமிழகம்: 12 தொகுதிகளில் வேட்பாளர்களை 'லைக்' அல்லது 'அன்பிரண்ட்' செய்யும் சக்தி படைத்த பேஸ்புக் வாக்காளர்கள்!
சென்னை: தமிழகத்தில் 12 லோக்சபா தொகுதிகளில் பேஸ்புக், ட்விட்டர்
போன்ற சமூக வலைத்தளங்கள் சக்தி வாய்ந்ததாக உள்ளதாம். இங்கு இவற்றின்
தாக்கம் வாக்காளர்கள் மத்தியில் அதிகம் இருக்கும் என்று
கணிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை மற்றும் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் இளைஞர்கள்
மத்தியில் பேஸ்புக், ட்விட்டர் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும்
கணிக்கப்பட்டுள்ளது.
எனவே இவர்களைக் கவரும் வகையில் பேஸ்புக், ட்விட்டர், பிளாக்குகள் மூலமாக
பல்வேறு அரசியல் கட்சியினரும் முனைப்புடன் செயலாற்ற களம் இறங்கியுள்ளனராம்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூற்றின்படி
தமிழகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 44 லட்சம் வாக்காளர்களில், 18 முதல்
19 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 16.7 லட்சமாகும்.
மேலும் கோவை, சேலம், நெல்லை, ஈரோடு, மதுரை, விழுப்புரம், விருதுநகர்,
காஞ்சிபுரம், சிவகங்கை, சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்தி ஆகிய 12
தொகுதிகளில் பேஸ்புக் பரம்பரையினர் என்று செல்லமாக வர்ணிக்கப்படும்
பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவோர் நிறைய உள்ளனராம்.
இந்த தொகுதிகளில் பேஸ்புக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட
15 சதவீதத்திற்கும் மேலாக உள்ளதாம். இது நிச்சயம் ஒரு வேட்பாளருடைய
வெற்றியை நிர்ணயம் செய்யக் கூடிய சக்தி படைத்தது என்று கருதுகிறார்கள்.
இதுதொடர்பான ஆய்வை மும்பையைச் சேர்ந்த ஐரிஸ் நாலேட்ஜ் பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்த வருடத் தொடக்கத்தில் நடத்தியுள்ளது.
வேலூர், கன்னியாகுமரி, கடலூர், திருச்சி, கரூர் தொகுதிகளில் பேஸ்புக் வாக்காளர்கள் எண்ணிக்கை மீடியமாக உள்ளதாம்.
திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய
தொகுதிகளில் பேஸ்புக் வாக்காளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக
இருக்கிறதாம்.
இந்த ஆய்வை காங்கிரஸ் கட்சி சீரியஸாக எடுத்துக் கொண்டிருப்பதாக
கூறுகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் என்ற நிர்வாகி. பேஸ்புக்,
ட்விட்டர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தும் இளைஞர்களை எங்கள் பக்கம் ஈர்க்க
முயற்சித்து வருகிறோம் என்று கூறுகிறார் விஜய்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாமக,
விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் போன்ற கட்சிகளில் தனியாக தகவல்
தொழில்நுட்பப் பிரிவை வைத்துள்ளனர்.
பார்க்கலாம்.. இந்த பேஸ்புக் வாக்காளர்கள் எத்தனை வேட்பாளர்களுக்கு லைக்
கொடுக்கப் போகிறார்கள்.. எத்தனை பேரை அன்பிரண்ட் ஆக்கப் போகிறார்கள்
என்று...!
No comments:
Post a Comment