இடைத்தேர்தல் நடைபெறும்
ஏற்காடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,34,734 பேர்
சேலம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஏற்காடு தனி (எஸ்.டி.) தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 734 ஆகும். ஏற்காடு தொகுதி அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு டிசம்பர் 4-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, நேற்று தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏற்காடு தொகுதி அமைந்துள்ள சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. எனவே, நேற்றில் இருந்து தேர்தல் செலவுகள் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடங்கிவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில விதிமுறைகள் மட்டும் ஏற்காடு தொகுதிக்கு மட்டும் பொருந்தும்.
அதன்படி, இயற்கை பேரிடர், வறட்சி, உணவு மற்றும் குடிநீர், குழாய் கிணறு தோண்டுதல், கால்நடை தீவனம், வேளாண்மை மானியங்கள், புதிய வளர்ச்சி திட்டங்கள், அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தொடக்கம், நிதி அனுமதித்தல், அரசு சொத்துக்களை விளம்பரத்திற்காக பயன்படுத்துதல் ஆகியவை தொடர்பான இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுரைகள் இடைத்தேர்தல் நடக்கும் இந்த தொகுதிக்கு மட்டும் பொருந்தாது. அதே நேரத்தில், அந்த தொகுதி அமைந்துள்ள மாவட்டத்திற்கு இந்த திட்டங்கள் பொருந்தும்.
மேலும், அமைச்சர்களின் பயணம், வாகனங்களை பயன்படுத்துதல், விளம்பரங்கள், அரசு இல்லங்களை பயன்படுத்துதல் ஆகியவை தொடர்பான இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுரைகள் அனைத்தும், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி அமைந்துள்ள மாவட்டம் முழுமைக்கும் பொருந்தும். இதில், அதிகாரிகளை மாற்றுவது தொடர்பான தேர்தல் கமிஷனின் அறிவுரைகள் பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்கள்
தமிழ்நாட்டில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காட்டில் 64 மலைக்கிராமங்கள் உள்ளன. இத்தொகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலானவர்கள் மலைவாழ் மக்கள் ஆவர். அதைத் தொடர்ந்து கடந்த 1957-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, ஏற்காடு தனித்தொகுதியாக (எஸ்.டி.) உருவாக்கப்பட்டது. அதுமுதல் 2011 வரை 13 சட்டமன்ற தேர்தல்களை ஏற்காடு தொகுதி சந்தித்துள்ளது.
1957-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1962-ம் ஆண்டில் காங்கிரஸ், 1967-ல் தி.மு.க., 1971-ல் தி.மு.க., 1977-ல் அ.தி.மு.க., 1980-ல் அ.தி.மு.க., 1984-ல் காங்கிரஸ், 1989-ல் அ.தி.மு.க., 1991-ல் அ.தி.மு.க., 1996-ல் தி.மு.க., 2001-ல் அ.தி.மு.க., 2006-ல் தி.மு.க, 2011-ம் ஆண்டில் அ.தி.மு.க. என ஏற்காடு தொகுதி மக்கள் மாறி, மாறி வெற்றிகளை தந்துள்ளனர்.
கடந்த தேர்தலில் வென்ற பெருமாள்
கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 13-ந் தேதி நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் சி.பெருமாள் (வயது 60) வேட்பாளராக போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தமிழ்செல்வனை விட 37,582 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அப்போது தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,09,981 ஆகும்.
பதிவான வாக்குகள் 1,79,492. சி.பெருமாள் (அ.தி.மு.க.) வாங்கிய ஓட்டுகள் 1,04,221 ஆகும். தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 66,639 வாக்குகள் பெற்றார். வெற்றி பெற்ற பெருமாள் ஏற்கனவே, 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சேவல் சின்னத்திலும், 1991-ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்திலும் நின்று வெற்றி பெற்றவர்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளரான சி.பெருமாள் மாரடைப்பால் உயிரிழந்தார். பெருமாள் எம்.எல்.ஏ. இறந்ததையொட்டி தற்போது ஏற்காடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் தற்போது வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 1.10.2013 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் விவரப்படி மொத்தம் 2,34,734 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள்- 1,16,958. பெண் வாக்காளர்கள்- 1,17,771. இதரர் (திருநங்கைகள்)- 5.
ஏற்காடு தொகுதி தேர்தலுக்காக 120 இடங்களில் 290 வாக்குச்சாவடி மையங்கள் (பூத்) அமைக்கப்படும்.
No comments:
Post a Comment