'இந்தியாவில் மனநோய் பாதிப்பால் தினசரி 400 பேர் தற்கொலை'

இந்தியாவில் மன நோயால் தினசரி 400 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதில்
தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் உலக சுகாதார மையத்தின் புள்ளியல் விவர
கணக்கெடுப்பில் வேதனைத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மனநலம்
பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன. மன அழுத்தம், மன
நோய் பாதிப்புக்குள்ளானவர்களை பராமரிக்க முடியாமல் ஏதோ ஒரு இடத்திற்கு
கொண்டு சென்று அநாதைகளாக விட்டுவிடும் போக்கும் அதிகரித்திருக்கிறது.
இதுகுறித்து நாகர்கோவிலை சேர்ந்த மனநல மருத்துவர் ஆ.காட்சன் கூறியதாவது:
உலக சுகாதார மையத்தின் புள்ளியல் கணக்கெடுப்பின்படி உலக மக்கள் தொகையில்
சராசரியாக ஒரு சதவீதம் பேர் தீவிர மனநோயினாலும், 15 சதவீதம் முதல் 20
சதவீதம் பேர் மன அழுத்தம் உள்பட மற்ற வகை மன நோயினாலும் 4 சதவீதம் பேர்
போதை பொருட்களால் ஏற்படும் மனநோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 350
முதல் 400 இந்தியர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்கின்றனர்.
இதில் தமிழகம் முதல் இடம் வகிக்கின்றது. இதன்படி, 7 லட்சம் பேர் தீவிர
மனநோயாலும், 70 லட்சம் பேர் மன அழுத்தம் உள்பட மற்ற பாதிப்பாலும், 15
லட்சம் பேர் போதை பொருளால் ஏற்படும் மன நோயினாலும், 2 லட்சம் குழந்தைகள்
மனவளர்ச்சி மற்றும் கற்றல் திறன் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன நோய்கள் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் உருவாகின்றன.
இம்மாற்றங்கள் தானாகவோ, வாழ்க்கை சூழ்நிலைகளினாலோ அல்லது பல்வேறு நரம்பு
சம்பந்தப்பட்ட நோய்களினாலோ உண்டாகலாம். மனநோயும் மருந்துகளால்
குணப்படுத்தக்கூடிய ஒன்றாகும்.
தூக்கமின்மை, தேவையற்ற பதற்ற உணர்வு, கைநடுக்கம், எதிலும் நாட்டமின்மை,
தற்கொலை எண்ணங்கள், கட்டுப்படுத்த முடியாமல் திரும்ப திரும்ப ஏற்படும்
எண்ணங்கள் அல்லது செயல்கள், தானாக பேசுதல் அல்லது சிரித்தல், காரணமற்ற
சந்தேகங்கள், யாரோ பேசுவது போன்ற குரல் கேட்டல், ஆக்ரோஷம், மிதமிஞ்சிய
கற்பனை, மறதி, செக்ஸ் பிரச்சனைகள் என காரணம் கண்டுபிடிக்க முடியாத உடல்
நோய்கள் மனநோயின் அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment