இமயமலை பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டால் 8 லட்சம் பேர் பலியாகும் ஆபத்து!
டெல்லி: இமயமலை பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 8 அலகுகள் அளவில்
நிலநடுக்கம் ஏற்பட்டால் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்
உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அதிர்ச்சி
எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய துணைத்தலைவர் எம்.சசிதர் ரெட்டி
கூறியதாவது:
நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது.
ஆயினும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமையை கொண்டிருப்பதே
சிறந்ததாகும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் 8 அல்லது அதற்கு மேலான ரிக்டர்
அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்ற ஆய்வை
தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் மேற்கொண்டது. இதில் இமயமலை பகுதி
ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
கடந்த 1897-ம் ஆண்டு முதல் 1950 வரையிலான 53 ஆண்டுகளில் இமயமலைத்தொடர்
பகுதி நிலநடுக்கத்துக்கு அதிக வாய்ப்புகள் உண்டான பகுதியாக இருந்தது.
இந்த 53 ஆண்டுகளில் ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக பதிவான 4 நிலநடுக்கம் குறிப்பிடத்தக்கது.
சில்லாங்கில் 1897, காங்ராவில் 1905, பீகார்-நேபாளம் எல்லையில் 1934,
அசாமில் - 1950 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பலத்த இழப்பு
ஏற்பட்டது.
1950-ல் இருந்து அதைப் போன்ற ஒரு நிலநடுக்கம் ஏற்படவில்லை.
இருப்பினும் இந்த பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய
வாய்ப்புகள் இருக்கிறது.
தற்போதைய நிலையில் இமயமலைத்தொடர் பகுதிகளில் ரிக்டர் அளவில் 8 அல்லது
அதற்கு மேலான அளவு நிலநடுக்கம் ஏற்பட்டால் காஷ்மீர் முதல் அருணாசலப்
பிரதேசம் வரை 8 முதல் 9 லட்சம் வரையிலான மக்கள் உயிரிழக்கும் அபாயம்
உள்ளது.
1897 ஆம் ஆண்டு மேகாலயா தலைநகர் ஷில்லாங்கை மையமாகக் கொண்டு மிகப்
பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மியான்மர் முதல் டெல்லி வரை கடுமையான
விளைவுகளை ஏற்படுத்தியது.
மீண்டும் 1897ஆம் ஆண்டைப் போல ஒரு நிலநடுக்கம் தற்போது ஏற்பட்டால்
அசாம் மாநிலத்தில் மட்டும் 6 லட்சம் பேர் பலியாகும் அபாயம் இருக்கிறது.
ஷில்லாங் நிலநடுக்கம் போல மீண்டும் ஏற்பட்டால் எப்படியான பேரிடர்
மீட்பு பணிகளை மேற்கொள்வது என்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment