Thursday, October 3, 2013

இந்தியாவில் முதன் முதலாக மனச்சோர்வு நீக்கும் ஆபரேஷன் வெற்றி - www.tnfinds.com - Best site in the World

இந்தியாவில் முதன் முதலாக மனச்சோர்வு நீக்கும் ஆபரேஷன் வெற்றி

  

மும்பை : மனச்சோர்வை நீக்கும் ஆபத்தான மூளை ஆபரேஷன், இந்தியாவில் முதன்  முதலாக மும்பை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த ஆபரேஷனை செய்து கொண்டு குணமானவர்  ஒரு ஆஸ்திரேலியர்.  டிப்ரஷன் எனப்படும் மனச்சோர்வு நீக்கும்  ஆபரேஷன் பெயர் ‘டீப் ப்ரெயின் ஸ்டிமுலேஷன் சர்ஜரி’ (டிபிஎஸ்) என்று பெயர். அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த ஆபத்தான ஆபரேஷனை மருத்துவமனைகள் செய்கின்றன. ஆனால், செலவு அதிகம். 15 ஆண்டாகவே, பர்கின்சன், பக்க வாதம் போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்க இந்த ஆபரேஷன் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நாடுகள் வெளிநாட்டு நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்வதில்லை.

இந்தியாவில் இந்த ஆபரேஷனை செய்ய எந்த மருத்துவமனையும் முன்வரவில்லை. நோயாளிகளும் தயாரில்லை. இந்த ஆபரேஷனுக்கு 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெஞ்சமின் வால்ட் என்பவர், ஆறாண்டாக மனச்சோர்வு காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார். அவர் ஆஸ்திரேலி யாவில் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றால் அங்கு இந்த அரிய ஆபரேஷனுக்கு அனுமதி இல்லை.

அவர் மும்பை ஜஸ்லோக் மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆபரேஷன் செய்வதாக அறிந்து இந்தியா வந்தார். அவருக்கு கடந்த 25ம் தேதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர் ஜோஷி தலைமையிலான 17 டாக்டர்கள் கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தது.

மூளையின் ஆழப்பகுதியில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை இது. மூளையில் மிக நுண்ணிய பகுதியில் உள்ள உணர்ச்சி நரம்புகளை தூண்டி, மனச்சோர்வை தரும் நரம்புகளை முடக்கி செயலிழக்க இரு எலக்ட்ராட்ஸ் என்ற மின்காந்த தகடுகள் பொருத்தப்படுகின்றன. அந்த தகடுகள் மூலம் மூளையில் மாற்றம் ஏற்பட்டு, உணர்வு நரம்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் மனச்சோர்வு நீக்கப்படுகிறது. 

இந்த அறுவை சிகிச்சையை தான் டாக்டர் ஜோஷி தலைமையிலான குழு வெற்றிகரமாக செய்துள்ளது. தன் 21வது பிறந்த நாளில் இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டது திருப்தியாக உள்ளது. எனக்கு இந்த வயதில் இருந்து மனச்சோர்வு நீங்குகிறது என்பதை நினைக்கும் போது திருப்தியாக உள்ளது. இந்த ஆறாண்டுகள் நான் அதனால் பல வகையில் பாதிக்கப்பட்டேன் என்று வால்ட் கூறினார்.

அவர் மருத்துவமனையில் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெறுவார். அதன் பின்  அவர் நாடு திரும்புவார் என்று டாக்டர்கள் கூறினர்.
‘மனச்சோர்வு என்பது மன ரீதியான பிரச்னை மட்டுமல்ல. மனோதத்துவ, சமூக ரீதியான கோளாறு; மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதை சரி செய்ய  அறுவை சிகிச்சையால் முடியுமா என்ற கேள்வி உள்ளது. இதில் வளர்ந்த நாடுகள் வெற்றி கண்டுள்ளதாக கூறுகின்றன. இந்தியாவில் இனி தான் அதை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று நரம்பியல் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது

No comments: