வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தடையா...?
டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில்
பங்கேற்பதிலிருந்து தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்
போவதாக பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்யா வர்மா கூறியுள்ளார்.
இவர்தான் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அதன் உரிமையாளரான
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுக்கும் பெரும் தலைவலியாக
இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் போட்ட வழக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள
நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், ராஜஸ்தான் ராயல்ஸுக்கும்
எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போடவுள்ளாராம் வர்மா.
"ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் வழக்கின் இறுதி விசாரணை அறிக்கை வெளியாகும்
வரையாவது இந்த இரு அணிகளையும் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கத் தடை விதிக்க
வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தைக் கோரவுள்ளேன்" என்றார் வர்மா.
ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகத்தில் நிலவி வரும் ஊழல் விவகாரம் குறித்து
விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதி்மன்றம் நியமித்துள்ளது
நினைவிருக்கலாம்.
ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி ஏற்கனவே ஸ்ரீசாந்த்,
சவான் ஆகியோர் ஆயுள் கால தடை விதிக்கப்பட்டுள்ளனர். சண்டிலா மீதான விசாரணை
தொடர்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரின்சிபல் ஆக இருந்தவரான சீனிவாசன்
மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது மும்பை போலீஸார் குற்றப்பத்திரிக்கை
தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில்தான் ஏலத்தில் பங்கேற்க சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குத்
தடை விதிக்க வேண்டும் என்று கோருகிறார் வர்மா. இந்த கோரிக்கையை
உச்சநீதிமன்றம் ஏற்குமா.. தடை வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க
வேண்டும்.
No comments:
Post a Comment