வருகிறது தீபாவளி... ஆனால் மகா அமைதியில் சிவகாசி!
சிவகாசி: தீபாவளி நெருங்கி விட்டது.. ஆனால் மகா அமைதியாக
காணப்படுகிறது பட்டாசுத் தலைநகர் சிவகாசி. கந்தக நகரில் ஒரு வித இறுக்கம்
பிளஸ் கலக்கத்துடன்தான் பட்டாசுத் தயாரிப்பு நடந்து வருகிறதாம்.
காரணம்- அரசு விதித்துள்ள கடுமையான விதிமுறைகள். மிகுந்த கவனத்துடன்
பட்டாசுகளை தயாரிக்க வேண்டிய நிலை இருப்பதால் கவனக்குறைவு வந்து விடாமல்
கருத்தாக இருக்கும் பட்டாசு தொழிற்சாலைகள், பெரிய அளவில் பட்டாசுகளைத்
தயாரித்துக் குவிக்க முடியாத நிலையில் உள்ளனவாம்.
பெருகி வரும் பட்டாசு ஆலை விபத்துக்கள் காரணமாக மாநில அரசின் காவல்துறை,
வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் கெடுபிடியான விதிமுறைகளை அமல்படுத்தி
உன்னிப்பாக கவனித்து வருவதால், தாறுமாறாக, விதிமுறைகளுக்குப் புறம்பாக
பட்டாசுத் தயாரிக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையி்ல உள்ளனவாம் பட்டாசு
ஆலைகள்.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு அரசுத் துறைகள் மிகுந்த
உன்னிப்புடன் சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளைக்
கண்காணித்து வருகின்றனவாம்.
இதுவரை இல்லாத அளவுக்கு பட்டாசுத் தயாரிப்பி்ல் ஈடுபட்டுள்ள
தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசுத் துறைகள் அக்கறை காட்டி
வருகின்றனவாம்.
இந்த கெடுபிடியான கண்காணிப்பு காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசுத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுச்
செயலாளர் ஆசைத்தம்பி கூறுகையில், எங்களுக்கு உற்பத்தி குறைந்ததோடு, வட
மாநிலங்களிலிருந்து வரும் ஆர்டர்களும் கூட இந்த முறை குறைந்துள்ளன.
இருப்பினும் கச்சாப் பொருட்களின் விலை அதிகரித்தவண்ணம் இருப்பதால்
இந்த முறையும் பட்டாசு விலை குறைய வாய்ப்பில்லை. மேலும் சரக்கு வாகனக்
கட்டணமும் அதிகரித்துள்ளது. தொழிலாளர்கள் கிடைப்பதும் அதிகரித்துள்ளது.
கூடுதல் சம்பளம் தர வேண்டியுள்ளது. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க
வேண்டியுள்ளது. எனவே விலையைக் குறைக்க வாய்ப்பில்லை என்றார் ஆசைத்தம்பி.
சிவகாசிதான் சீனாவுக்கு அடுத்து அதிக அளவில் பட்டாசுகள் தயாரிக்கும் நகரமாகும். சீனாவில் 3000 பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ளனவாம்.
இலங்கையிலும் கூட பெருமளவில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
என்றாலும் கூட சாதாரண பட்டாசுகளைத்தான் அவர்கள் தயாரிக்கிறார்கள்.
பெரும்பாலாவற்றை சிவகாசியிலிருந்துதான் அவர்கள் இறக்குமதி செய்கிறார்களாம்.
கேரளாவிலும் பட்டாசு தயாரிக்கிறார்கள். ஆனால் அவர்கள் குளோரைடு வைத்து
தயாரிக்கிறார்கள். இதன் விலை குறைவுதான் ஆனால் ஆபத்து அதிகமாகும்.
சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் பெரும்பாலும் நைட்ரேட் அல்லது சல்பர் அடிப்படையிலானவை.
நெல்லை மதுரையிலும் கூட பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நெல்லையில்
17 ஆலைகளும், மதுரையில் 10 தொழிற்சாலைகளும் உள்ளன. இவை போக புதுக்கோட்டை,
தர்மபுரி, தூத்துக்குடி, சேலத்திலும் கூட சொற்ப அளவில் பட்டாசுத் தயாரிப்பு
தொழிற்சாலைகள் உள்ளன.
சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 15 முதல் 20 சதவீதம்
மட்டுமே தமிழகத்திற்குள் விற்கப்படுகிறது. மற்றவை எல்லாம் பிற
மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக
தென் ஆப்பிரிக்காவுக்கு நிறைய போகிறதாம்.
More News Click Here.....
More News Click Here.....
No comments:
Post a Comment