சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: போலீஸ் பக்ருதீன் கைது
சென்னை: சேலம் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, தீவிரவாதி, 'போலீஸ்' பக்ருதீன் கைது செய்யப்பட்டான். சென்னை சூளைமேட்டில் மறைந்திருந்த அவனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வேலூரில், ஜூலை மாதம், 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், வெள்ளையப்பன் கொடூரமாக கொல்லப்பட்டார். தொடர்ந்து, அதே மாதம், 19ம் தேதி, சேலத்தில், பா.ஜ., அலுவலகம் முன், அக்கட்சியின் மாநில பொதுச் செயலர், ஆடிட்டர் ரமேஷை, மூவர் கும்பல் வெட்டிச் சாய்த்தது. தொடர்ந்து, இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., நரேந்திரபால் சிங் தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, முதல்வர் உத்தரவிட்டார்.பைப் வெடிகுண்டு
கடந்த, 2011ல், மதுரை, திருமங்கலத்தில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வரும் வழியில், 'பைப்' வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் வேறு சில வழக்குகளில், தலைமறைவாகிய, மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த, "போலீஸ்'பக்ருதீன், 45, பிலால் மாலிக், 25, நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த, பன்னா இஸ்மாயில், 38 மற்றும் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், 45, ஆகிய நால்வரையும் தேடி வந்தனர்.
17 கிலோ வெடிபொருட்கள்
நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில், 17 கிலோ வெடி மருந்து மற்றும் டெட்டனேட்டர்களுடன்சிலரை, ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை விசாரிக்கும், சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையன் கொலையிலும், பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
ரூ.20 லட்சம் சன்மானம்
இவர்களை பற்றி தகவல் தருபவர்களுக்கு, ஒரு நபருக்கு, 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம், 20 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் எனவும் காவல்துறை அறிவித்தது. இவர்களை தேடுவதற்காக, பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தகவல் கிடைக்கும் இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே, தற்போது போலீஸ் பக்ருதீன் பிடிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி குடை
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற திருப்பதி குடை ஊர்வலத்தை சீர்குலைக்கும் முயற்சியில் போலீஸ் பக்ருதீன் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. அவன் வைத்திருந்த செல்போன்கள், சிம்கார்ட், ஸ்கெட்மேப் போன்றவைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீஸ் பக்ருதீன் கூட்டாளிகள் சிலரை திருப்பூரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment