Thursday, January 9, 2014

வாகனங்களில் "1077' புகார் எண் எழுத...உத்தரவு! வேகமாக செல்லும் டிரைவர்களுக்கு ஆப்பு - www.tnfinds.com - Best site in the world...

வாகனங்களில் "1077' புகார் எண் எழுத...உத்தரவு! வேகமாக செல்லும் டிரைவர்களுக்கு ஆப்பு

தர்மபுரி: மாவட்டத்தில் உள்ள அனைத்து கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்களில், வேகமாக செல்லும் வாகனங்கள் குறித்து மக்கள் புகார் தெரிவிக்க, "1077' எண்ணை பயன்படுத்துமாறு, விழிப்புணர்வு வாசகங்கள் எழுத, அனைத்து வாகன உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், பைக், ஆட்டோ, மினி லாரி, வேன், லாரி, பஸ் உட்பட, நான்கு லட்சத்து, 61 ஆயிரத்து, 364 வாகனங்கள் உள்ளன. இதில், ஆட்டோ, மினி லாரி, வேன், லாரி, பஸ் உள்ளிட்ட டிரான்ஸ்போர்ட் வாகனங்கள், 1,700 உள்ளன.
மாவட்டத்தில், கடந்தாண்டில், 338 பெரிய விபத்துக்களும், 1,162 சிறிய விபத்துக்களும் அரங்கேறியது. இதில், 365 பேர் பரிதாபமாக இறந்தனர். 1,768 பேர் காயம் அடைந்தனர்.
மாவட்டத்தில் நடக்கும் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, கலெக்டர் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து டிரான்ஸ்போர்ட் வாகனங்களின் பின்புறமும், "இந்த வாகனம் அதிவேகமாக இயக்கப்பட்டால், "1077' என்ற தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்,' எனவும், அவசர உதவிக்கு "108' ஆம்புலன்ஸ் எனவும், கட்டாயமாக விழிப்புணர்வு வாசகங்களை எழுதி இருக்க வேண்டுமெனவும், விழிப்புணர்வு வாசகங்கள் இல்லாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆர்.டி.ஓ.,க்களுக்கும், ப்ரேக் இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து ஆர்.டி.ஓ., அலுவலர்கள் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதியை மீறி பல வாகன ஓட்டுனர்கள், வாகனங்களை அதிவேகமாக இயக்கி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விபத்துக்கள் அதிகரித்து வருவதுடன், உயிர் பலியின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க, ஆட்டோ, மினிலாரி, லாரி, பஸ் உள்ளிட்ட அனைத்து டிரான்ஸ்போர்ட் வாகனங்களிலும், "இந்த வாகனம் அதிவேகமாக இயக்கப்பட்டால், "1077'க்கு, தகவல் தரவும்,' என்ற வாசகத்தை, எழுத உத்தரவிடப்பட்டு உள்ளது.
தற்போது, எப்.சி., எடுக்க தர்மபுரி, பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு வரும் அனைத்து டிரான்ஸ்போர்ட் வாகனங்களிலும், இந்த வாசகத்தையும், அவசர உதவிக்கு, "108' ஆம்புலன்ஸ் என்ற வாசகத்தையும் கட்டாயமாக பதிவு செய்யப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் சமூக அவலங்களை தடுப்பதற்காகவும், குழந்தை திருமணம் உள்ளிட்டவற்றை தடுக்கவும், மாவட்ட நிர்வாகம் அறிவித்த, "1077' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால், அதே எண்ணில், வேகமாக செல்லும் வாகனங்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் அதிவேகமாக செல்லும் வாகன எண், வாகனம் செல்லும் சாலை குறித்த விவரங்களை, "1077' என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால், வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

More Hot News Click Here...

No comments: