Friday, January 10, 2014

டீ கடை பெஞ்ச் - www.tnfinds.com - Best site in the world...

டீ கடை பெஞ்ச்

கலகலத்துப் போன கோபாலபுரம்!''லோக்சபா வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னால, மாவட்ட செயலர்கள் சிலரை, மாத்த திட்டமிருக்கா ஓய்...'' என்றபடி, நாயர் கடைக்கு வந்தார், குப்பண்ணா.
''எந்தக் கட்சியில் வே, இந்த அதிரடி...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''அ.தி.மு.க.,வுல தான் ஓய்... ரெண்டு வருஷமா, மாவட்ட செயலர், அமைச்சர்ன்னு பல பேரை மாத்தியிருக்கா... சில பேர், ரெண்டு, மூணு கூடுதல் பொறுப்புல இருக்கா... அதனால, பொறுப்பு இல்லாத மத்தவா எல்லாம், அதிருப்தியில இருக்கா...

''பதவி பறிபோன சில பேரு, தன் ஆதரவாளர்களோட, தனி கோஷ்டியாவே செயல்படறா... இப்படியே போனா, 'பதவி இல்லாதவா, லோக்சபா தேர்தலுக்கு, சரியா வேலை செய்ய மாட்டா'ன்னு, கட்சித் தலைமைக்கு, தகவல் போயிடுத்து... ''அதனால, வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னாடி, சிலருக்கு, பொறுப்பு வழங்க இருக்கா... இதை தெரிஞ்சுண்ட, சில மாவட்ட செயலர்கள், தங்களோட ஆதரவாளர்களுக்கு, மேலிடத்துல, சிபாரிசு செய்ய ஆரம்பிச்சுட்டா ஓய்...'' என விளக்கினார், குப்பண்ணா.

''தி.மு.க.,விலிருந்து, தென் மண்டல அமைப்பு செயலர், அழகிரியை, 'சஸ்பெண்ட்' செய்யணும்'னு, தொடர்ந்து வலியுறுத்திக்கிட்டு இருக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.

''யாரு பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''தே.மு.தி.க., கூட்டணிக்கு எதிரா, அழகிரி தெரிவிச்ச கருத்து, கூட்டணிக்கே உலை வைக்கிற நிலையை ஏற்படுத்தி இருக்கு... ''அதனால, அழகிரி மேலே, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கணும்னு, பொருளாளர் ஸ்டாலின் தரப்புல இருந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருத்தரு மூலமா, அழுத்தம் கொடுத்துட்டு இருக்காவ...

''சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்து விடக் கூடாதுன்னு, அழகிரியோட தங்கை செல்வியும், தம்பி தமிழரசும், கோபாலபுரத்துல, கருணாநிதியை சந்திச்சு, அழகிரிக்கு ஆதரவா, பரிஞ்சு பேசியிருக்காவ...

''அழகிரி மேல, நடவடிக்கை எடுக்கணும்னு, முன்னாள் மத்திய அமைச்சர், தொடர்ந்து வலியுறுத்திட்டு இருக்குறதால, முந்தா நாளு, சி.ஐ.டி., காலனி வீட்டுக்குக் கூட போகாம கருணாநிதி, ரொம்ப சோகமா இருந்தாரு வே...'' என, நடந்த சம்பவத்தை விளக்கினார் அன்வர்பாய்.

''ரயில்களில், இருசக்கர வாகனங்களை, வெளியிடங்களுக்கு அனுப்பும் நுகர்வோர், ஒப்பந்ததாரரின் அடாவடி வசூலால், அவதிக்கு உள்ளாகுறாங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.

''எந்த ஊருல பா...'' என்றார் அன்வர்பாய்.

''மதுரையில் தாங்க... ரயில்களில், இரு சக்கர வாகனங்களை அனுப்ப, கட்டணம் குறைவு தான்... ஆனா, அதை, 'பேக்' செய்து ரயில்களில் ஏற்றவும், வெளியிடங்களிலிருந்து வரும் வாகனங்களை இறக்கவும், ஒப்பந்தம் வாங்கினவங்க, அதிக கட்டணம் வசூலிக்கிறாங்க...

''சில நேரங்களில், வாகன விலை வரை கூட கேட்கறாங்க... ரயில்வே அதிகாரிகள், அப்பப்ப எச்சரிச்சாலும், இந்த அடாவடி வசூல் நிற்கவில்லை... ''அதனால, இருசக்கர வாகனங்களை அனுப்ப நினைக்கிறவங்க, கட்டணத்தைக் கேட்டு புலம்புறாங்க...'' என்ற அந்தோணிசாமி, நடையைக் கட்டினார். மற்றவர்களும் கிளம்பவே, பெஞ்ச் அமைதியானது.

More Hot News Click Here...

No comments: