Friday, January 10, 2014

பாரம்பரியம் மாறாத மண் பானைப் பொங்கல்....- www.tnfinds.com - Best site in the world...


பாரம்பரியம் மாறாத மண் பானைப் பொங்கல்…

மானாமதுரை: மானாமதுரையில், பொங்கல் திருநாளையொட்டி, இல்லங்களில் பொங்குவதற்கு தயாராகும் வகையில், பொங்கல் பானைகள், பல வகைகளில் தயாராகின்றன. 

மண் பாண்டத்திற்கு பெயர் பெற்ற மானாமதுரையில், கஞ்சிக் கலயம் முதல், கலையம்சம் பொருந்தியகடம் வரை, மண்ணால் தயார் செய்யப்படுகிறது. 

இங்கு தயாராகும் மண்பாண்டங்கள், உறுதியாகவும், நேர்த்தியாகவும், தரமாகவும் இருப்பதால், வெளி மாவட்டங்களில் வரவேற்பு உள்ளது. சீசனுக்கு தகுந்தவாறு மண்பாண்ட பொருட்கள் தயார் செய்வது, இங்குள்ள தனிச்சிறப்பு.

சிவகங்கை மாவட்டத்தில்.


பொங்கல் திருநாளுக்காக சிவகங்கை மாவட்டத்தில் மண் பானைகள் தயாராகின்றன. மாவட்டத்தில் பூவந்தி, மானாமதுரை, வேதியரேந்தல், சிவகங்கை, பாகனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்படுகின்றன.

பாரம்பரிய மணம்.

பாரம்பரியத்தை விரும்புவர்களுக்காக மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் கிராமப்புறங்களில் மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது வீட்டு வாசல் மற்றும் கால்நடை தொழுவம் ஆகியவற்றில் விவசாயிகள் பாரம்பரிய மண் அடுப்புகளில் மண் பானைகள் வைத்து பொங்கல் கொண்டாடுவார்கள். இவர்களை குறிவைத்தே மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன.

பொங்கல் பானைகள்.

தற்போது, பொங்கல் திருநாள் நெருங்குவதால், அதற்காக, பொங்கல் பானைகள், அடுப்புகள் தயாராகி வருகின்றன. ஐந்து கிராம கண்மாய்களில் உள்ள மண்ணை கலவையாக்கி, ஆறாவதாக வைகை ஆற்றுமணலை உறுதுணையாக்கி, அரைத்து மாவாக்கி, தரையில் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பானையாக தயாரிப்பதற்கு இசைவாகும் வரை, காலால் மிதித்து, கையால் பிசைந்து பக்குவப் படுத்துகின்றனர்.

தயாராகும் பானைகள்.

பக்குவமான மண் கலவை, மின் சக்கரத்தில் வைத்து, கைக்கு லாவகமாகிய பின், பல்வேறு வடிவங்களில் பானையாக உருவாக்குகின்றனர். அவற்றை, அரைகுறை வெயில், நிழலில் காய வைத்து, பெற்ற பிள்ளையை பேணி காப்பது போல் பாதுகாக்கின்றனர். பின், செங்கோட்டையிலிருந்து வரும் செம்மண்ணில், தண்ணீரை கலந்து இயற்கை சாயத்தில் வண்ணம் பூசுகின்றனர்.

பலபடி பானைகள்.

கால்படி அரிசியிலிருந்து, ஒன்றரை படி அரிசி வேகும் அளவுக்கு, பல்வேறு அளவுகளில் பானை தயாரிக்கின்றனர். பானை ஒன்றின் விலை, 26லிருந்து 70 ரூபாய் வரை, பல ரகங்களில் வியாபாரிகளுக்கு விற்கின்றனர். இங்கு வந்து கொள்முதல் செய்யும் வெளியூர் வியாபாரிகள், போக்குவரத்து செலவு, சேதாரம் சேர்த்து, இருமடங்கு விலை வைத்து விற்கின்றனர்.

மணக்கும் மண்பானைகள்.

உலோகப்பானைகளில் பொங்கல் வைத்தாலும் சுவைக்காத பொங்கல், மானாமதுரை பானையில் பொங்கல் பொங்கும் கமகம வாசனைக்காக, தேடி வந்து வாங்கி செல்கின்றனர். மதுரை, திருச்சி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவு வியாபாரிகள் பானைகள் வாங்க மானாமதுரை பகுதிக்கு வருகின்றனர்.

இலஞ்சி மண் பானை.

நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, இலஞ்சி உள்ளிட்ட சுற்று புறங்களில் மண்பானைகளையும், மண் அடுப்புகளையும் மும்முரமாக தயாரித்து வருகின்றனர். 

வாடிக்கையாளர்களின் விருப்பதுக்கு ஏற்ப பல்வேறு மாடல்களில் இவர்கள் தயாரித்து வழங்குவதால் இப்போதே அதன் விற்பனையும், விலையும் ஏற தொடங்கியுள்ளது.

உற்பத்தி பாதிப்பு.

மண் அள்ள தடை, வைக்கோல் தட்டுப்பாடு மற்றும் உற்பத்தி செலவு ஆகியவற்றால் மண்பானை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 விறகு, தேங்காய் மட்டை உள்ளிட்டவற்றின் விலைகளும் அதிகரித்து விட்டதால் உற்பத்தி குறைந்து பானை, சட்டிகள் மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணி கடந்த சில வாரங்களாக மந்தநிலையில் இருந்தது. இப்போது உற்பத்தி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

குறைந்தது 50 ரூபாய்.

சாதாரண மண்பானை ரூ.50 முதல் தொடங்குகிறது. ஸ்பெஷல் மண்பானை ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மண்பானை மற்ற பானைகளை விட பெரியதாக இருக்கும். மேலும் சுற்றிலும் வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

தலைப் பொங்கல்.

ஸ்பெசல் மண்பானையை தலை பொங்கலுக்காக திருணமான தம்பதிகளுக்கு பரிசாக வழங்குவர். இந்த பானை ஆர்டர் கொடுத்துதான் பெற முடியும் என்பதால் பலர் இதற்கு முன்னதாகவே ஆர்டர் கொடுத்து விட்டு பெற்று செல்கின்றனர்.

மண் அடுப்பு.

மேலும் மண் அடுப்பு ரூ.50 முதல் விற்பனை செய்யபட்டு வருகிறது. இந்நிலையில் குளங்களில் மண் எடுக்க அரசு கட்டுபாடு விதித்துள்ளதால் பெரும்பாலானோர் பானை செய்வதற்கு தேவையான மண் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

விலை உயர்வு.

பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மண் பானை விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆனால் தற்போது மண் பானைகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், விலை உயர்ந்து காணப்படுகிறது.

கிராமங்களில் பாரம்பரியம்.

நவீன காலத்தில் தற்போது அலுமினிய பாத்திரத்தில் பொங்கலிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் மின்சார அடு்ப்பில் பொங்கலிட்டு வருகின்றனர். ஆனாலும் கிராமப்புறங்களிலும் இன்னும் பாரம்பரியம் கைவிடப்படவில்லை.

வாசலில் பொங்கல்.

கிராமப் பகுதிகளில் வீட்டு வாசலில் மண் அடுப்பை வைத்து ஒலைகளால் நெருப்பு மூட்டி அதன் மேல் மண் பானைகளை வைத்து பொங்கலிடும் பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நகரங்களிலும் பொங்கல்.

நகர பகுதிகளிலும் பலர் இந்த பழக்கத்தை விடாமல் மேற்கொண்டுதான் வருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய மண்பானைகளையே வாங்கி பயன்படுத்துவர்.

மண்பானைப் பொங்கல்.

இன்று நாகரீக காலத்தில் பலரும் குக்கர் பொங்கலுக்கு மாறி விட்ட நிலையில் மண் பானையில் பொங்கல் வைக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மண்பானைகளுக்கு இன்றும் கூட நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இதனால்தான் மண்பானைத் தொழிலும் உயிர்ப்போடு இருக்கிறது.

More Hot News Click Here..


























No comments: