Wednesday, January 8, 2014

சிறுவன் வாயில் துப்பாக்கியை வைத்து போலீஸ் மிரட்டல்: குண்டு பாய்ந்து படுகாயம்; தொண்டையில் ஆபரேசன் - www.tnfinds.com - Best site in the world....


சிறுவன் வாயில் துப்பாக்கியை வைத்து போலீஸ் மிரட்டல்: குண்டு பாய்ந்து படுகாயம்; தொண்டையில் ஆபரேசன்

சென்னை: சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிறுவனின் வாயில் சென்னை நீலங்கரை காவல் நிலைய போலீசார், துப்பாக்கியை வைத்து மிரட்டினர். அப்போது சிறுவனின் வாயில் குண்டு பாய்ந்து வெளியேறியதில் தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு தொண்டையில் ஆபரேசன் செய்யப்பட்டது. சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மாகாந்தி நகரில் திங்களன்று கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது. இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். 

இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் இரவில் 16 வயது சிறுவன் ஒருவனை அழைத்து வந்தனர். அவனிடம் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை நடத்தினார். அப்போது அந்த சிறுவன் தான் திருடவில்லை என கூறினான். இந்த நிலையில் செவ்வாய்கிழமை 4 மணிக்கு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுவனின் வாயில் வைத்து திருடினாயா? என மிரட்டினார்.

இதற்கு தமீம்அன்சாரி சரியாக பதில் அளிக்காததால் அவனது வாயில் துப் பாக்கியை வைத்து இன்ஸ் பெக்டர் புஷ்பராஜ் மிரட்டியதாக கூறப்படுகிறது.அப்போது துப்பாக்கி வெடித்து குண்டு, சிறுவன் தமிம்அன்சாரியின் இடது பக்க தொண்டையில் பாய்ந்து பின்பக்கமாக வெளியேறியது. இதில் பலத்த காயம் அடைந்த அவன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான். 

இதனால் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இன்ஸ் பெக்டர் புஷ்பராஜ் மற்றம் போலீசாருடன் சேர்ந்து அவனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் தமீம்அன்சாரி அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது தொண்டை ரத்தக்குழாய் மற்றும் எலும்பில் பலத்த குண்டு காயம் ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 

தொண்டை பகுதியையொட்டிய கழுத்தில் பாய்ந்த குண்டு வெளியேறி இருந்தாலும், அதன் துகள்கள் ரத்தக் குழாய் பகுதியில் படர்ந்திருந்தன. குண்டு பாய்ந்ததில் ரத்தக் குழாயும், எலும்பும் சேதம் அடைந்திருந்தது. இதனை ஆபரேசன் மூலம் டாக்டர்கள் சரி செய்தனர். சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாலும், குண்டு உடலில் தங்காமல் வெளியேறியதாலும் அதிர்ஷ்டவசமாக தமிம் அன்சாரி உயிர் தப்பினான். 

செவ்வாய்கிழமை இரவு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்திருந்தாலும், அவன் புதன்கிழமை காலை வரையிலும் மயக்க நிலையிலேயே காணப்பட்டான். மாலையில் அவன் இயல்பு நிலைக்கு திரும்புவான் என்று டாக்டர்கள் தெரிவித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். சிறுவன் தமீம்அன்சாரி இதற்கு முன்னர் திருட்டு வழக்கில் கைதாகி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் இருந்துள்ளான்.

 இதன் காரணமாகவே அவனை விசாரணைக்காக அழைத்து சென்றோம் என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தை கண்டித்தும், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று இரவு வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

போலீஸ் நிலையத்தில் சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் சென்னை போலீஸ் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



No comments: