Thursday, January 9, 2014

சிறுவனை சுட்ட இன்ஸ்பெக்டரை கைது செய்க: ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்- வைகோ - www.tnfinds.com - Best site in the world...


சிறுவனை சுட்ட இன்ஸ்பெக்டரை கைது செய்க: ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்- வைகோ

சென்னை: சிறுவனை துப்பாக்கியால் சுட்ட நீலாங்கரை இன்ஸ்பெக்டர் புஷ்பராஜை கைது செய்து வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வலியுறுத்தியுள்ளார். காவல்துறைக்குப் பொறுப்பு ஏற்றிருக்கின்ற முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்லியாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: "சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட நீலாங்கரை ஜெ-8 காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜ், வெட்டுவாங்கேணி மகாத்மா காந்தி நகரில் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டதற்காக, சந்தேகத்தின் பேரில் தமிம்அன்சாரி என்ற 16 வயதுச் சிறுவனை, 7ஆம் தேதி நடுநிசி இரண்டு மணி அளவில் பிடித்து, விசாரணைக்கு அழைத்து வந்து அடித்துச் சித்ரவதை செய்து திருட்டு சம்பந்தமாக விசாரித்து உள்ளார்.

 தனக்கும் திருட்டு சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லியும், அதைப் பொருட்படுத்தாமல், சிறுவனை நீலாங்கரை காவல் நிலைய லாக்கப்பில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து உள்ளார். 7ஆம் தேதி பிற்பகல் 4 மணி அளவில் ஆய்வாளர் புஷ்பராஜ், மீண்டும் அந்த பச்சிளம் பாலகனை அடித்து உதைத்து விசாரித்து உள்ளார். 

வலி தாங்க முடியாமல் அழுத தமிம் அன்சாரியை, திருட்டை ஒத்துக் கொள்கிறாயா இல்லையா என்று, மனிதாபிமானமற்ற முறையில் தன் கைத்துப்பாக்கியை எடுத்துச் சிறுவனின் வாயில் சொருகி மிரட்டிய போதும், தனக்குச் சம்பந்தம் இல்லை என்று சைகை மூலம் சிறுவன் கூறி இருக்கிறான். இருப்பினும், இரக்கமே இல்லாமல் சிறுவனின் வாய்க்கு உள்ளேயே, சக காவலர்களுக்கு முன்னாலேயே காவல் ஆய்வாளர் சுட்டு உள்ளார். 

குற்றுயிரும் குலைஉயிருமாக மயங்கி விழுந்த சிறுவனைப் பார்த்துப் பதறிப்போய் நிலைமை கைமீறி விபரீதமாகப் போய்விட்டதால், காவல்துறையினர் அச்சிறுவனைத் தூக்கிக் கொண்டு போய், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து உள்ளனர். சிறுவனின் நிலைமை தற்போது எப்படி உள்ளது என்பதை குடும்பத்தாருக்குத் தெரிவிக்கவில்லை; பார்ப்பதற்கும் அனுமதிக்கவில்லை.

 உச்ச நீதிமன்றம் வகுத்து உள்ளபடி, ஒருவரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லும் முன் காவலர்கள் பின்பற்ற வேண்டிய 11 கட்டளைகளை நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை. தமிம் அன்சாரியைக் கைது செய்தது பற்றிக் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கவில்லை; காவல்நிலைய லாக்கப்பில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்து உள்ளனர்; மனிதாபிமானமற்ற முறையில் துப்பாக்கியால் சுட்டும் உள்ளனர்.

 காவல் நிலையத்திலேயே தண்டனைகள் வழங்கப்படும் என்றால், வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும், தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளும் எதற்காக? காவல்துறைக்குப் பொறுப்பு ஏற்று இருக்கின்ற தமிழக முதலமைச்சர் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். மான் வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாட்டில், மனித வேட்டைகள் நடைபெறுவது வேதனை அளிக்கின்றது. 

தமிழகக் காவல்துறையின் அராஜகம் கட்டுப்பாடு இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தற்காப்புக்காக வழங்கப்பட்டு இருக்கின்ற துப்பாக்கியைக் கொண்டு அப்பாவிகளைச் சுடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. காவல் துறையின் மீது உள்ள நம்பகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டுமெனில், உடனடியாக நீலாங்கரை ஜெ 8 காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தல் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். 

சுடப்பட்ட சிறுவன் தமின்அன்சாரிக்கு, தமிழக அரசு சார்பில் உயர் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்; ஏற்கனவே கணவனை இழந்து ஏழ்மை நிலையில் கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் ஏழைச் சகோதரி சபீனா பேகத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

 ஒருசில கடமை தவறிய காவலர்களின் அடாவடி அராஜகப் போக்கால், இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் தொடர்வது வேதனைக்கு உரியது. அப்பாவிகளைச் சித்ரவதை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பாக, காவலர்களுக்குத் தக்க பயிற்சிகள் வழங்கிடவும், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காதவண்ணம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.




No comments: