Thursday, January 9, 2014

நா காக்க...காவாக்கால்....- www.tnfinds.com - Best site in the world.....

நா காக்க...காவாக்கால்....

எதிர்கட்சியாக இருக்கும் போது கவலைப்படாமல் எது வேண்டுமானாலும் பேசலாம்; தேவைப்பட்டால் திருத்திக்கொள்ளலாம். அதனால் பெரிதாக பாதிப்பு வராது.  ஆனால், ஆட்சியில் அமர்ந்து விட்டால் கண்டிப்பாக ‘நா காக்க’ வேண்டும். இப்படி தான் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார் ஆம்  ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால். ஒரு நாள் முதல்வர் போல, ஒரே நாளில் குடிநீர் வாரியத்தில் 800 பேரை டிரான்ஸ்பர் செய்து பலரையும் மூக்கில் விரலை வைக்க வைத்தவர். இருந்தாலும் அவர் படும்பாடு பரிதாபம் தான். 

தடாலடியாக அறிவிப்புகளாய் வெளியிட்டு வந்த நேரத்தில் சீனியர் தலைவர் பிரசாந்த் பூஷண் போட்டாரே ஒரு போடு, காஷ்மீரில் ராணுவம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்று மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்று சொன்னது மற்ற கட்சிகளின் மூத்த தலைவர்களுக்கு பெரும் இடியாக பட்டது. முதலில் வாய்திறந்த பாஜ மூத்த தலைவர் அருண் ஜெட்லி, ‘நேரு செய்த காரியத்துக்கு தான் நாம் இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். காஷ்மீர் தீவிரவாதிகளும், பாகிஸ்தானும் சொன்னதை இப்போது பூஷண் திருவாய் மலர்ந்திருக்கிறார். இது எங்கு கொண்டு போய் விடப்போகிறதோ என்று அச்சத்தை கிளப்பி விட்டார். 

அவர் சொன்னது உண்மை தான். காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும், உண்மை புரியாமல் நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படும் என்றும் தெரியாமல் இப்படி தீப்பற்றும் கருத்துக்களை இப்படிப்பட்டவர்கள் சொல்லக்கூடாது’ என்று கண்டித்தனர். அவசர அவசரமாக கெஜ்ரிவால், எங்களுக்கும் பூஷண் கருத்துக்கும் தொடர்பில்லை என்று கழற்றியும் விட்டார். எனினும் பூஷண் உபயத்தால், சில அமைப்புகள் கோபத்தில் கெஜ்ரிவாலின் வீடும், ஆபீசும் தாக்கப்படும் நிலைக்கு ஆளானது வேறு விஷயம். 
சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் காஷ்மீரில் ராணுவம் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. 

நடப்பு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கீடு 2,53,345 கோடி ரூபாய். இதில் கணிசமான ஒதுக்கீடு காஷ் மீர் ராணுவத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது. சிறப்பு அதிகாரம் உள்ள ராணுவம், காஷ்மீர் மட்டுமின்றி, மணிப்பூர், அசாம் போன்ற பிரிவினைவாத பிரச்னை உள்ள மாநிலங்களில் அமர்த்தப்பட்டுள்ளது.  யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், சோதனை செய்யலாம், சுடலாம், சந்தேகப்பட்டால் சுட்டுக்கொல்லலாம்... இது தான் இவர்களின் சிறப்பு அதிகாரம். எதற்கும் இவர்கள் யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. 

இந்த சர்ச்சை, பல காலகட்டங்களில் எழுந்துள்ளது. மணிப்பூரில்  காவலில் இருந்த மணிப்பூர் பிரிவினைவாத அமைப்பின் தலைவி  தன்சியாம் மனோரமா கொல்லப்பட்ட சர்ச்சைக்கு பின் மத்திய அரசு நீதிபதி ஜீவன்ரெட்டி கமிஷனை போட்டது. மனிதநேயத்துடன் ராணுவ சிறப்பு அதிகார முறையில் மாற்றம் தேவை என்று அது பரிந்துரை செய்தது. பிரதமர் மன்மோகன்சிங்கும், கண்டிப்பாக பரிந்துரை செயல்படுத்தப்படும் என்றார். ஆனால், ராணுவ சிறப்பு அதிகார சட்டம் இன்னும் திருத்தப்படவில்லை. 

இப்படி சர்ச்சைகளுக்கு இடையே, காஷ்மீர் மக்களை தூண்டிவிடும் அளவுக்கு பூஷண் கமென்ட் இது இரண்டாவது முறை. 2011ல் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, இந்தியாவுடன் தான் காஷ்மீர் மக்கள் இருக்க விரும்புகின்றனரா என்று வாக்கெடுப்பு நடத்தினால் தவறில்லை என்று கூறியிருந்தார். அன்னாவே அதிர்ந்து விட்டார். இதற்கு தான் எங்கு, எதை பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும். நா காக்காவிட்டால்... திருவள்ளுவர் சொன்னது போல, சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு.

More Hot News Click Here....

No comments: