மகனின் இறுதிக்கிரியைக்காவது தந்தை வருவாரா? ஜனாதிபதியிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்த தாய்
கிளிநொச்சியில் திடீர் மரணமடைந்த தன்னுடைய 14 வயதான மகனின் இறுதிக்கிரியைகளில் பங்குகொள்ள, கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான தமது கணவரை அனுமதிக்குமாறு கிளிநொச்சியைச் சேர்ந்த சிவாஜினி வீரலிங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் நீண்டகாலமாக தவித்துக்கொண்டிருந்த மகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தலைசுற்றி விழுந்து மரணமடைந்ததாகவும், இதனால் தமது குடும்பம் மிகவும் மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தாயாரான சிவாஜினி ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருக்கும் அவசர கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.
கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த 48 வயதுடைய சுப்பிரமணியம் வீரலிங்கம் என்பவரின் மகனான நிதர்ஷனே நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் மரணத்தைச் சந்தித்திருக்கின்றார். 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தில் கைதான இவர் கடந்த ஐந்து வருட காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரது மூத்த மகனான நிதர்சனே ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்திருக்கின்றார். இவரது ஏனைய 3 பிள்ளைகளும் பெண்களாவர். வீரலிங்கம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இப்போது மூத்த மகனும் மரணமடைந்திருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்கள்.
‘என்னுடைய 14 வயதான மகனைப் பறிகொடுத்து தவித்துக்கொண்டு நிற்கின்றேன். தயவு செய்து என்னுடைய கணவரை இப்போதாவது விடுதலை செய்யுங்கள். அவர் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். என்னுடைய மூத்த மகன் தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் பல வருடகாலமாக தவித்துக்கொண்டு இருந்தவர்.
திடீரென தலைசுற்றி விழுந்து ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்திருக்கின்றார்.
இதனால் எமது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மகனின் இறுதிக் கிரியைகளில் பங்குகொள்வதற்காவது எனது கணரை விடுதலை செய்யுங்கள்’ என மனைவி ஜனாதிபதியிடம் உருக்கமாகக் கோரியுள்ளார்.
இல.1108, திருநகர் தெற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்த திரு.வீரலிங்கம் மற்றும் திருமதி சிவாஜினி வீரலிங்கம் ஆகியோரின் மகன் வீ.நிதர்சன் கடந்த 05.01.2014 ஞாயிறன்று திடீரென மயங்கி விழுந்து மரணமுற்றுள்ளார்.
குடும்பத்தின் ஒரேயொரு ஆண்பிள்ளையும் குடும்பத்தின் மூத்தவருமான இவர் தனது பதினாறு(16) வயதிலியே குடும்பப்பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இவரது சகோதரிகளான நிதுர்சிகா (15வயது), யதுர்வினா (13வயது) மற்றும் கதுர்சிகா (6வயது) ஆகியோரின் படிப்புச் செலவு உட்பட தாயையும் குடும்பத்தையும் ஓரளவிற்குப் பட்டினியின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காக இவர் தனது படிப்பைத் தியாகம் செய்து தினக்கூலி வேலைசெய்து வந்தார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் இவரது தந்தை வீரலிங்கம் கைதுசெய்யப்பட்டு எதுவித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது தாய் கூறுகின்றார்.
தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த இவர், தனது மனவேதனையை தனக்குள்ளேயே அடக்கிவைத்து குடும்பப் பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டு வந்துள்ளார்.
தனது உழைப்பில் கிட்டும் வருமானம் சாப்பாட்டுச் செலவிற்கே போதாமையால் தங்கைகளின் படிப்பிற்கு என்ன செய்வதென்று அவர் மனதிற்குள்ளேயே தினமும் அழுதிருக்கின்றார்.
தந்தையின் பிரிவால் ஏற்பட்ட சோகம் ஒருபுறமும், நாள் தோறும் பெருகி வருகி;ன்ற வாழ்க்கைச் செலவை ஈடு கட்ட இயலாமை ஒரு புறமுமாக நிதர்சனை வாட்டிவதைத்துள்ளது.
இறுதியில் வீரலிங்கம் தம்பதியினர் தனது மகனையும் அவரது சகோதரிகள் தமது அன்புச் சகோதரனையும் இழநது தவிக்கின்றனர்.
அந்தக் குடும்பம் மட்டுமன்றி திருநகர் தெற்கே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றது.
விடயம் கேள்விப்பட்டவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் திரு.இந்திரராசா மற்றும் பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் கட்சியின் இலண்டன் பிரதிநிதி இராஜேஸ்;வரன் (பரமேஸ்), கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் வேளமாலிகிதன் ஆகியோர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு தங்களது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதித்த மக்களின் துயரை ஓரளவிற்காவது போக்குவதற்கு முன்னின்று உழைத்துவரும் ரி.ஆர்.ரி. தமிழொலி வானொலி தமது நேயர்களின் மூலம் நிதி திரட்டி வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனூடாக அன்னாரின் ஈமக்கிரியைக்காக ஐம்பதினாயிரம் ரூபாவைக் கொடுத்துள்ளனர்.
உழைத்துக் கொடுத்த ஒரே மகனும் மரணித்துவிட்டார். கணவன் எப்பொழுது விடுதலை ஆவார் என்று தெரியாமல் தடுப்பில் உள்ளார்.
அவர் வெளியில் வந்தாலும் அவரால் கடினமாக உழைக்க முடியுமா என்ற சந்தேகமும் நிலவுகின்றது.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற ஷெல் வீச்சில் இவரது வயிற்றுப் பகுதியில் காயமேற்பட்டு அவரது குடலில் இரண்டு அடிவரை வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.
சாப்பிட்ட உடனேயே சத்தி எடுப்பதாக இவருடன் தடுப்பில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.
இனி இவரது குடும்பத்தின் வாழ்வாதாரம் பலத்த கேள்விக்குள்ளாகியுள்ளது.
மகனின் இறுதிச் சடங்கில் பங்கெடுப்பதற்குக்கூட இந்த அரசாங்கம் அனுமதி அளிக்குமா என்று தெரியவில்லை.
நல்ல உள்ளம் படைத்த உறவுகள் அவர்களின் குடும்பத்திற்கு இயலுமான உதவிகளைச் செய்வதற்கு முன்வரவேண்டும் என்றும் 0094778566838 என்ற தொலைபேசியில் அவர்களை தொடர்புகொண்டு உங்களது உதவிகளைச் செய்யுங்கள் என்றும் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment