Thursday, January 2, 2014

10 வயது மகளின் அறிவுரை உருக்கியது மனதை : குடியிலிருந்து மீண்டார் தந்தை - www.tnfinds.com - Best site in the world...

10 வயது மகளின் அறிவுரை உருக்கியது மனதை : குடியிலிருந்து மீண்டார் தந்தை

 

மதுரை:தன், 10 வயது மகளின் அறிவுரையால், குடிப்பழக்கத்திலிருந்து மீண்ட கூலித்தொழிலாளி, மதுரை கலெக்டர் அலுவலகம் முன், மது விலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.

மதுரை முனிச்சாலை கோணிப்பை தைக்கும் தொழிலாளி மோகன்ராஜ், 37. இவரது மகள் ஜோதிமணி, 10, காமராஜர் சாலை ஹார்வி நர்சரி பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கிறார்.பூரண மதுவிலக்கு கோரி இருவரும், நேற்று காலை 8 மணிக்கு, மதுரை கலெக்டர் அலுவலக வாசலில் உண்ணாவிரதம் இருந்தனர். தல்லாகுளம் போலீசார், 'உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க முடியாது' என கூறினர். பின், கோரிக்கையை வலியுறுத்தி, மோகன்ராஜ், மகளுடன், கலெக்டர் சுப்ரமணியத்திடம் மனு அளித்தார்.

மோகன்ராஜ் கூறியதாவது: சிறுவயதில் மதுவிற்கு அடிமையானேன்; குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. எனக்கு, இரு குழந்தைகள். குடியை விடுமாறு, மூத்த மகள் ஜோதிமணி கண்ணீர் மல்க எனக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தாள். மகளின் கண்ணீர் என்னை உருக்கியது; மகள் புத்திமதி சொல்லும் நிலைக்கு ஆளானோமே... என வருந்தினேன்.மதுவிலிருந்து விடுபட, கொடிக்குளம் மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஒரு ஆண்டிற்கு முன், அதை நிறுத்தினேன். என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்கள், மது பழக்கத்திலிருந்து விடுபட, துண்டுபிரசுரம் மூலம் நானும், மகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு கூறினார்.

மது, போதையில் இருந்து மீள, ஏதாவது, அமானுஷ்யம் நிகழ வேண்டும் என்பதில்லை. பத்து வயது சிறுமியின் அறிவுரையும், அன்பு ஊற்றெடுக்கும் முகமும், அந்த சக்தியை கொடுக்கும் என்பதற்கு, ஜோதிமணி ஒரு உதாரணம். அன்பு, நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டால், போதையின் கோரப்பிடியில் இருந்து விடுபடலாம்.

No comments: