26 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்த தாயும், மகளும்... மங்களூரில் ஒரு 'சென்சேஷனல்' சந்திப்பு!
மங்களூர்: அது ஒரு உணர்ச்சிகரமான சந்திப்பு... கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தாயும், மகளும் இணைந்த நெகிழ்ச்சியான நிமிடம் அது... 26 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்ட ஒரு பெண், தனது நிஜமான அம்மாவை சந்தித்த தருணம் அது..
சொல்லியும் புரிய வேண்டுமா, அந்த நொடியில் பொங்கிப் பெருகி ஓடிய உணர்வின் உயிரோட்டத்தை... மங்களூரில்தான் இந்த உணர்வுப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
26 வயது ஜாய்ஸ்.
லண்டனில் சட்டம் படித்து வருபவர் ஜாய்ஸ்.. 26 வயது இளம் பெண். பிறந்ததுமே தத்து கொடுக்கப்பட்டு விட்டார். இந்த நிலையில்தான் தன்னைப் பெற்ற தாயை சந்திக்க அவருக்கு ஆர்வம் வந்தது. தாயைத் தேடும் பணியில் இறங்கினார்.
தேடலில் வந்த சிக்கல்.
ஆனால் ஜாய்ஸின் தேடல் பெரும் சிக்கலாக மாறியது. காரணம், அவரது தாயார் இந்தியாவில் இருந்ததால்.
அபயக்கரம் நீட்டிய அஞ்சலி பவார்.
இந்த நிலையில்தான் சக்கீ சிறார் உரிமை என்ற அமைப்பின் இயக்குநரான அஞ்சலி பவார், ஜாய்ஸுக்கு உதவிக் கரம் நீட்டினார். அவரது தாயைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பை அவர் ஏற்றார். அவருடைய உதவியின் மூலம் ஜாய்ஸின் தேடல் தொடர்ந்தது.
ஒரு பிளாஷ்பேக்....
ஜாய்ஸ் பிறந்தபோது அவரது பெற்றோர் இட்ட பெயர் லிட்வின். 1987ம் ஆண்டு பிறந்தார். லிட்வினின் தாயார் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் பிறந்த ஒரு வருடத்திலேயே நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு லிட்வினை தத்து கொடுத்து விட்டார் அவருடைய தந்தை. லிட்வின், ஜாய்ஸ் என்ற பெயரில் நெதர்லாந்து பயணமானார்.
தாயைத் தேடிய 3 குழந்தைகளில்.. ஜாய்ஸும் ஒருவர்.
அதன் பிறகு நடந்தது குறித்து அஞ்சலி பவார் கூறுகையில், ஒரு வருடத்திற்கு முன்பு தங்களது தாயைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று வெளிநாட்டிலிருந்து மூன்று பேர் எங்களை அணுகினர். அவர்களில் ஒருவர் ஜாய்ஸ்.
தத்து கொடுத்த ஆவணத்திலிருந்து கண்டுபிடிப்பு.
இதையடுத்து தீவிரத் தேடலைத் தொடங்கினோம். ஜாய்ஸ் தத்து கொடுக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை முதலில் கண்டுபிடித்தோம். அதன் மூலம் ஜாய்ஸின் தாயாரைக் கண்டுபிடித்தோம்.
மூல ஊர் மூட்பித்ரி.
ஜாய்ஸின் பூர்வீகம் மங்களூர் அருகே உள்ள மூ்ட்பித்ரி ஆகும். அங்குதான் ஜாய்ஸின் தாத்தா, பாட்டி வசித்து வந்தனர். அந்த ஊரில் வைத்துத்தான் ஜாய்ஸின் தாயார் அவரை பிரசவித்தார். அங்கிருந்தபடியே குழந்தையையும் தத்து கொடுத்துள்ளனர்.
டெல்லியிலிருந்து நெதர்லாந்துக்கு.
முதலில் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளார் ஜாய்ஸ். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்துக்குப் போயுள்ளார்.
மனநல காப்பகத்தில் தாயார்.
ஜாய்ஸின் தாயார் மூட்பித்ரியில் உள்ள ஒரு மன நல காப்பகத்தில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜாய்ஸை வரவழைத்து அவரது தாயாரை அறிமுகப்படுத்தி வைத்தார்.. பிறகென்ன பொங்கி ஓடியது பாசத் தழுவல்கள், கண்ணீர் வெள்ளங்கள். தாயைப் பார்த்ததுமே கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டார் ஜாய்ஸ்... மகிழ்ச்சியுடன்.
மகளை அடையாளம் தெரியாத தாய்.
ஆனால் ஜாய்ஸின் தாயார் இன்றும் கூட மன நலம் சரியில்லாதவராகவே இருக்கிறார். அவரால் அவரது மகளை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது மட்டுமே அவருக்குத் தெரிந்துள்ளது. அவரால் தனது தாய்மை உணர்வுகளைக் கூட முழுமையாக பிரதிபலிக்கவில்லை.. காரணம் அவரது உடல் நலம், மன நலம். இவர்தான் உங்களது மகள் என்று கூறியபோது கூட லேசாக புன்னகைத்தார் ஜாய்ஸின் தாயார்... இனி ஜாய்ஸுக்கு அவரது தாயாரும் ஒரு குழந்தைதான்!
No comments:
Post a Comment