காணாமல் போன ரூ.5 லட்சம் பணத்தை ஒப்படைத்த நேர்மைமிக்க பெண்!!
சென்னை: தமக்கு கிடைத்த ரூ.5 லட்சம் பணத்தை நேர்மையோடு ஒப்படைத்த பெண்ணை போலீஸ் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் சேக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள். கடந்த டிசம்பர் 29ந் தேதி சென்னை மேத்தா நகரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றார்.
அங்கு அண்ணனிடம் கொடுத்து வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு, கோயம்பேடு பஸ் நிலையம் சென்றார். கோயம்பேட்டில் வாங்கிய பழம், பூ ஆகியவற்றையும் பணம் இருந்த தமது பையில் வைத்திருக்கிறார் முனியம்மாள். ஆனால் பையை கீழே வைத்துவிட்டு, மீண்டும் எடுக்கும் போது, தமது பைக்கு பதிலாக அதே போன்று இருந்த மற்றொரு பையை எடுத்துக் கொண்டு முன்னியம்மாள் ஊருக்கு புறப்பட்டார்.
கோயம்பேடு பேருந்தில் ஏறும் போதுதான் தமது பைக்கு பதில் வேறு பையை எடுத்து வந்ததை கண்டுள்ளார். இதைத் தொடர்ந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் முனியம்மாள் புகார் கொடுத்தார். இந்நிலையில், புழுதிவாக்கத்தை சேர்ந்த கோகிலா என்ற பெண், பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமாருக்கு போன் மூலம் ஒரு தகவல் கொடுத்தார்.
அதில், கடந்த 29ந் தேதி அன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்ற போது, தான் கொண்டு சென்ற பை காணமால் போனதாகவும், அதற்கு பதில் வேறு பை கிடைத்ததாகவும், ஆனால், அந்த பையில் ரூ.5 லட்சம் இருந்ததாகவும் கூறினார். இதனையடுத்து, கோயம்பேடு காவல் நிலையத்திற்கு போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் தகவல் கொடுத்தார்.
பின்னர் கோகிலாவிடம் இருந்த ரூ.5 லட்சத்தை அதன் உரிமையாளர் முனியம்மாளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். பின்னர் அந்த பணம் முனியம்மாளிடம் கொடுக்கப்பட்டது.
ரூ. 5 லட்சம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த கோகிலாவுக்கு போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment