Thursday, January 2, 2014

"ரெடிமேடு'மயத்தால் மங்கும் மார்கழி: கோலமிடும் முறைக்கு முற்றுப்புள்ளி - www.tnfinds.com - Best site in the world...

"ரெடிமேடு'மயத்தால் மங்கும் மார்கழி: கோலமிடும் முறைக்கு முற்றுப்புள்ளி


கோவை: மாற்றுக்கலாசாரத்தை நோக்கி படையெடுப்பதால், அன்றாட வேலைகளும், "ரெடிமேடு' மயமாகிவிட்டன. மண்தரைகளை சிமென்ட் பூச்சுகள் ஆக்கிரமித்துள்ளதால், மார்கழியை வரவேற்கும் கோலமிடும் பழக்கத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகிறது.
இறைவழிபாட்டுக்கு உகந்த தமிழ் மாதங்களில், மார்கழியும் ஒன்று. மார்கழி மாதம் என்றாலே, சிறப்பு பூஜைகள், வீதியெங்கும் வண்ண கோலம், மூடுபனி என, எக்கச்சக்க சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கும். விவசாயிகள், உழுது பயிரிட்ட விளைச்சலை, வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும், அறுவடை மாதம் மார்கழி தான். மார்கழியில் சாகுபடியாகும் தானியங்களே, தை பொங்கலுக்கு, படையலாகின்றன. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட மார்கழி மாதத்தை, வீடுதோறும் வண்ண கோலமிட்டு வரவேற்பது வழக்கம். இந்த நடைமுறை, தற்போது குறைந்து கொண்டே வருகிறது. மார்கழி மாதம் துவங்கி, பல நாட்களாகியும், பல வீதிகளில் வண்ணக் கோலங்களே இன்றி, வெற்றிடமாக காட்சியளிக்கின்றன. மாறிவரும் கலாசாரம், நவீனத்தை அதீதமாக வரவேற்பது உள்ளிட்டவை, வாசல் கோலங்களுக்கும், முற்றுப்புள்ளி வைத்துள்ளன. நம் முன்னோர் எறும்பு, பூச்சி போன்ற சிறிய உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்காக, வீடுகள், கால்நடைகளின் கொட்டகை, குப்பை மேடு உள்ளிட்ட இடங்களில், சாணம் தெளித்து, பச்சரிசி மாவில் கோலமிடுவது வழக்கம். புறநகர் மற்றும் நகர் பகுதிகளில், பொருளாதார நோக்கத்தோடு கூடிய, அணுகுமுறை அதிகரித்துள்ளதால், வீடுகளுக்கு முன்பு, திண்ணை அமைக்கும் நடைமுறை அடியோடு மாறிவிட்டது. இருக்கும் நிலத்தை தவிர, தெருக்களையும் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி, மண்தரைகளை சிமென்ட் பூச்சுகளால் அலங்கரிப்பதால், மண்தரையை பார்ப்பதே அரிதாகிவிட்டது. சிமென்ட் தரையில், "கெமிக்கல்' சாணப்பொடியால் அலங்கரித்து, சுண்ணாம்பால் அழியாத கோலம் போடுவதால், எந்த பயனும் இல்லை.

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த லீலாவதி கூறுகையில்,""சாணம் தெளித்து கோலம் போடுவதை, பலர் நாகரிகமற்ற செயலாக கருதுகின்றனர். கிருமி நாசினியான சாணத்தை வாசலில் தெளிப்பதால், வெளியிடங்களுக்கு செல்லும் போது, கால்களில் சேர்ந்துவரும் கிருமிகள், சாணம் பட்டு அழிந்து விடும் என்பர். குளிர்காலத்தில், சின்னசிறு உயிரினங்கள், இரைதேடி செல்ல முடியாததால், பச்சரிசி கோலமிடுவது வழக்கம். ஆனால், இது கடந்த ஐந்து ஆண்டுகளாக மாறிவிட்டது. ""சாணப்பொடியை தூவி, சுண்ணாம்பு கோலத்தையோ, ரெடிமேட் "ஸ்டிக்கரை'யோ ஒட்டுவிடுகின்றனர். உடலுழைப்பை கொடுக்க வேண்டிய வேலைகள் எல்லாம், ரெடிமேடு மயமாகிவிடுவதால், பெண்களுக்கு உடலளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது,'' என்றார்.

More Hot News Click Here..

No comments: