அக்கம் பக்கம்
மும்பையில், ராணுவ வீரர்களுக்காக, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு ஊழல், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, பிரித்விராஜ் சவான் மற்றும் காங்., கட்சியை சேர்ந்த, மூன்று முன்னாள் முதல்வர்கள் மீது, இதில், குற்றம் சாட்டி, விசாரணை குழு, அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை, குப்பை கூடையில் போட்டு விட்டு, பிரித்விராஜ் சவானும், அவரின் அமைச்சரவை சகாக்களும் நிம்மதியாக இருந்தனர். திடீரென, காங்., துணை தலைவர் ராகுல், இந்த விஷயத்தில், மூக்கை நுழைத்து, 'விசாரணை அறிக்கையை நிராகரிக்க கூடாது. ஊழலில் தொடர்புள்ளவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆவேசமாக முழங்கினார். இதை, 'டிவி'யில் பார்த்த பிரித்விராஜுக்கு, 'கிலி'யடித்து விட்டது. 'அய்யய்யோ... நம்ம ஆளு, 'சேம்சைடு கோல்' அடிக்கிறாரே! இவரு, நல்லவரா, கெட்டவரா...' என, பீதியில் உளறிக் கொட்டத் துவங்கி விட்டார். இதற்காகவே காத்திருந்த, காங்கிரசின் கூட்டணி கட்சியான, தேசியவாத காங்., தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான, அஜீத் பவார், 'ஆதர்ஷ் ஊழலில் தொடர்புடைய யாரையும் விட்டு வைக்க கூடாது; அனைவரையும், சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை வாங்கித் தர வேண்டும்' எனக் கூற, பிரித்விராஜோ, 'ஆஹா... நமக்கு எதிராக, ஊரே ஒன்று கூடிடுச்சு போலிருக்கே. இனிமேல், முதல்வர் நாற்காலி, நமக்கு சொந்தமில்லை' என்றபடியே, பதவியை ராஜினாமா செய்வதற்கு தயாராகி வருகிறார்.
No comments:
Post a Comment